பூர்வீக குடிமக்களின் நிலங்களுக்கு தீங்கு விளைவித்துவரும் ஆயிரக்கணக்கான ஒட்டகங்களை சுட்டுக்கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் கடந்த வாரம் சுமார் ஐயாயிரம் ஒட்டகங்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவின் Anangu Pitjantjatjara Yankunytjatjara (APY) பிரதேசத்தில் இந்த ஐயாயிரம் ஒட்டகங்களும் கடந்தவாரம் படுகொலைசெய்யப்பட்டதாக நேற்றிரவு பூர்வீக நிலத்துக்கு சொந்தமானவர்களின் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்வீக குடிமக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் இந்த ஒட்டகங்களின் அட்டகாசங்கள் பெருகிச்சென்றதாலும் அந்த சமூக மக்களின் குடிதண்ணீர் நுகர்வு மற்றும் இயல்பு வாழ்க்கை இந்த ஒட்டகங்களினால் பாரியளவு பாதிக்கப்பட்டதாலும், பல்கிப் பெருகியுள்ள இந்த ஒட்டகங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சில பாதிப்புகளைக் கருத்திற்கொண்டும், இந்த கூட்டு முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயன்றளவு கொடூரமற்றவகையில் இந்த மரணங்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் வான் வழியாகவே இந்த ஒட்டகங்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பெருங்காடுகளில் வாழும் பல்லாயிரக்கணக்கானவற்றில் பத்தாயிரம் ஒட்டகங்களை இவ்வாறு சுட்டுக்கொல்வதற்கு முன்னர் முடிவெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.