மனைவியரை அழைத்துவராத இந்திய சுற்றுலாப் பயணிகள் மூவர் ஆஸ்திரேலியாவில் தடுத்துவைப்பு

தங்களது மனைவிமார் இல்லாமல் பயணம் செய்ததற்காக மூன்று இந்திய சுற்றுலா பயணிகள், 110 மணி நேரம் ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டு, சட்டப்போராட்டத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த விவகாரத்தில் தவறு இடம்பெற்றுள்ளமையை குடிவரவுத்துறை ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்கள் வருமாறு:

Three tourists from India were kept in a detention centre in Perth for almost 110 hours by the Australian Border Force (ABF) for not travelling with their spouses as stated in their visa application

Three tourists from India were kept in a detention centre in Perth for almost 110 hours by the Australian Border Force for not travelling with their spouses as stated in their visa application Credit: Supplied: Biju Pallan

இந்தியா, கேரளாவைச் சேர்ந்த Polachan Vareed, Shaju Kunjuvareed, Shibu Lonakunji ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் செப்டம்பர் முதலாம் திகதி, சுற்றுலா விசாவில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வந்து இறங்கியிருக்கிறார்கள்.

இவர்களை விசாரணைசெய்த ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப்படை(ABF) அதிகாரிகள், குறித்த மூவரது விசாக்களையும் ரத்துசெய்ததுடன், இவர்களை நாடுகடத்தும்நோக்கில் குடிவரவு தடுப்புமுகாமுக்கு அனுப்பிவைத்தனர்.

குறித்த மூவரும் ஆஸ்திரேலிய சுற்றுலா விசா விண்ணப்பத்தைத் தாக்கல்செய்யும்போது, தமது மனைவியரும் தம்முடன் பயணம்செய்யவுள்ளதாக குறிப்பிட்டிருந்ததாகவும், ஆனால் மனைவியர் இல்லாமல் இவர்கள் மட்டும் தனியாக ஆஸ்திரேலியா வருகை தந்திருப்பதால், தமது விண்ணப்பத்தில் தவறான தகவலை வழங்கினார்கள் என்ற அடிப்படையில் இவர்களது விசா ரத்துச் செய்யப்படுவதாகவும் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
PHOTO-2022-09-09-12-10-53.jpg
"We were excited about visiting Australia before touching down in Perth" Credit: Supplied: Biju Pallan
இதையடுத்து குறித்த 3 ஆண்களும் நீதிமன்றத்தின் உதவியைநாடியதைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் குடிவரவுத்துறையின் முடிவை ரத்து செய்ததையடுத்து குறித்த மூவரும் குடிவரவு தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

குடிவரவுச் சட்டம் 1958 இன் பிரிவு 101(b)ஐ தவறாகக் கருதிய எல்லைப் பாதுகாப்புப்படை பிரதிநிதி, விண்ணப்பதாரர் தவறான பதில்களை அளித்ததாகக் கண்டறிந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
அதேநேரம் குறித்த மூவரினதும் விசாக்களை ரத்துசெய்யும்விடயத்தில் தவறு நடந்திருப்பதை ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மூன்று சுற்றுலாப்பயணிகளினதும் விசா மீளவும் செல்லுபடியானதாக்கப்பட்ட அதேநேரம், இவர்களது சட்டச்செலவுகளை குடிவரவு அமைச்சு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
PHOTO-2022-09-09-12-11-29.jpg
Credit: Supplied: Biju Pallan
தனது மனைவி தன்னுடன் வரவில்லை என்ற காரணத்திற்காக தான் 5 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டதாகவும், தன்னை ஒரு குற்றவாளிபோல் கருதிய எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் கேள்விகளால் துளைத்தெடுத்ததாகவும், Polachan Vareed, SBS மலையாளத்திடம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சுற்றுலாப்பயணிகளை இப்படித்தான் நடத்துகிறதா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

குடும்பநிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் ஆஸ்திரேலியா வருகை தந்ததாகவும், இவர்களது மற்றுமொரு குடும்ப உறவினருக்கு ஆஸ்திரேலிய விசா கிடைக்காததையடுத்து இம்மூவரின் மனைவியரும் தாம் ஆஸ்திரேலியாவிற்கு வரவில்லை என தெரிவித்ததால், ஆண்கள் மூவரும் தனியாக பயணித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தம்மோடு தமது மனைவியரையும் அழைத்துவரவேண்டும் விசா நிபந்தனையில் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள குறித்த மூவரும், இச்சம்பவத்தால் தமக்கு நேர்ந்த சிரமங்கள் மற்றும் துன்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு SBS மலையாளம் கோரியிருந்தநிலையில், தனிப்பட்டவர்களின் விசா விடயங்கள் குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடமுடியாதென ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 14 September 2022 3:05pm
Updated 14 September 2022 3:12pm
By Deeju Sivadas
Source: SBS


Share this with family and friends