புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்துள்ளவர்கள் அதிகளவிலான இலவச ஆங்கிலமொழி வகுப்புக்களில் பங்கேற்பதற்கான வாய்ப்பினை வழங்கும் வகையில் சட்டமாற்றம் கொண்டுவரப்படுகிறது.
Adult Migrant English Program (AMEP) மூலம் அதிகளவு இலவச ஆங்கிலக்கல்வி கிடைப்பதன் ஊடாக, புலம்பெயர்ந்து வந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் தமது வாழ்க்கையை இலகுவாக கொண்டுசெல்ல முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த சட்டமுன்வடிவுக்கான நாடாளுமன்ற ஒப்புதல் அண்மையில் பெறப்பட்டுள்ள பின்னணியில் இப்புதிய சட்டமாற்றத்தை அரசு அறிமுகப்படுத்துகிறது.
இதன்படி தற்போது ஒருவர் 510 மணித்தியாலங்களுக்கு மட்டுமே Adult Migrant English Program (AMEP) ஊடாக இலவச ஆங்கிலக் கல்வியைப் பெறமுடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.
அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு வந்தநாள் முதல் எப்போது இத்திட்டத்தில் இணைந்துகொள்வது மற்றும் நிறைவுசெய்வது என்பது குறித்த கால எல்லைக் கட்டுப்பாடும் 2020 அக்டோபர் 1ம் திகதிக்கு முதல் நாட்டிற்குள் வந்தவர்களுக்கு நீக்கப்படுகிறது.
ஆங்கிலத்தைப் பேசுவதும் விளங்கிக்கொள்வதும் ஆஸ்திரேலிய வாழ்வில் முழுமையாகப் பங்குகொள்வதற்கு உதவும் என்பதுடன் வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கும் சுதந்திரமாக வாழ்வதற்கும் குடும்பவன்முறைக்கு ஆளானால் அதுகுறித்து முறையிடுவதற்கும் உதவும் என்பதாலேயே அரசு இம்முடிவினை எடுத்ததாக தற்காலிக குடிவரவு அமைச்சர் Alan Tudge தெரிவித்தார்.
உள்துறை அமைச்சினால் நிர்வகிக்கப்படும் ஆஸ்திரேலியாவின் 58 பிராந்தியங்களில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் 13 பதிவு செய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்களின் ஊடாக Adult Migrant English Program (AMEP) நடைமுறைப்படுத்தப்படுகிறது.