புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களின் பாதுகாப்பு விண்ணப்பங்களின் பரிசீலணைக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் தீடீரென இவ்வாறு இரண்டு வாரங்களில் நேர்முகம் என்று அழைப்பு வந்துள்ளது கவலை அளிப்பதாக புகலிடக்கோரிக்கையாளர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குறுகிய அவகாசத்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் சட்ட ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெற்றுக்கொள்வது கடினம் என்றும் போதுமாக சட்ட உதவிகளின்றி அவர்களால் தங்களின் பாதுகாப்புக்கோரிக்கைகளை சரிவர விளங்கப்படுத்தி முன்வைக்க முடியாது எனவும் அகதிகளுக்காக இலவச சட்ட ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்கி வரும் நிறுவனமான Refugee Advice and Casework Services (RACS) தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் சுமார் ஆயிரத்திற்கு அதிகமான புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு வீசாவிற்கான நேர்முகத்தை முடிக்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நேர்முகங்கள் தொலைபேசி அல்லது காணொளி வழியாக நடைபெறவுள்ளதால் நேர்முகத்தில் பங்குபெறும் புகலிடக்கோரிக்கையாளர்களால் தங்களின் தாய்நாட்டில் அனுபவித்த உயிர் அச்சுறுத்தல் சம்பவங்களை உரைப்பெயர்பாளர்களின் உதவியுடன் நேர்முகம் செய்யும் குடிவரவு அதிகாரியிடம் விரிவாக கூறி ஏற்றுக்கொள்ள வைப்பது கடினம் எனவும் சொல்லப்படுகிறது.
ஆனால் குடிவரவு சட்டங்களுக்கு அமையவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.