ஆஸ்திரேலியாவுக்கு வரவிரும்புகின்ற இந்தியா மற்றும் சில நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது தங்களது வங்கிக்கணக்கில் காண்பிக்கவேண்டிய வைப்புப்பண தொகையை உள்துறை அமைச்சு அதிகரித்திருக்கிறது.
இந்த புதிய மாற்றம் கடந்த செப்ரெம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட ஏற்பாடுகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பதற்கு செலுத்தவேண்டிய வருடாந்த பணத்துக்கு மேலதிகமாக 21 ஆயிரத்துக்கு 41 டொலர்களை தங்குமிட மற்றும் வாழ்வாதார செலவுகளுக்குரிய தொகையாக மாணவர்கள் வருவதற்கு முன்னரே தங்களது வங்கியின் ஊடாக நிதி ஆதாரமாக காண்பிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மாணவர் தனது துணையோடு வந்தால் துணைக்குரிய நிதி ஆதாரமாக ஆண்டொன்றுக்கு 7362 டொலர்களையும் குழந்தை இருந்தால் ஒரு குழுந்தைக்கு 3152 டொலர்கள் என்ற விகிதத்திலும் பாடசாலை செல்லும் பிள்ளையிருந்தால், ஒரு பிள்ளைக்கு ஆண்டொன்றுக்கு 8296 டொலர்கள் வீதமும் நிதி ஆதாரத்தை வங்கி ஊடாக காண்பிக்கவேண்டும் என்று இந்த புதிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதி ஆதாரங்கள் சேமிப்பு கணக்கிலோ நிலையான வைப்பிலோ காண்பிக்கப்படலாம்.