ஆஸ்திரேலியாவிலுள்ள விவசாய பண்ணைகளில் வேலை செய்வதற்கென, வெளிநாட்டவர்களுக்கு புதிய விஸாவை அறிமுகப்படுத்துமாறு ஆஸ்திரேலிய விவசாயிகள் சம்மேளம் விடுத்த கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் வேளாண்துறை அமைச்சர் David Littleproud இதற்கு ஆதரவாக அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கு முயற்சிசெய்தபோதும் கடந்த வாரம் அரச தரப்பின் பெரும்பான்மை அமைச்சர்கள் இந்த திட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்துள்ளார்கள்.
பழங்களை பிடுங்குவதற்கும் பண்ணைகளில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மாத்திரம் பெருகும் வேலைகளை முடிப்பதற்கும் உள்ளுரில் வேலையாட்களை பெற்றுக்கொள்வது தொடர்ந்தும் கடினமாகவுள்ளது என்றும், இந்த வேலைகளுக்கு வெளிநாட்டு வேலையாட்களை தருவித்துக்கொள்வதற்கு புதிய விஸாவை அரசு அறிமுகம் செய்தால் அது ஆஸ்திரேலியாவின் வேளாண்துறை வேலையாட்கள் பற்றாக்குறைக்கு மிகப்பெரிய உதவியாக அமையும் என்றும் ஆஸ்திரேலிய விவசாயிகள் சம்மேளனம் அண்மையில் அரசாங்கத்திடம் கோரியிருந்தது.
ஆஸ்திரேலிய வேளாண்துறை அமைச்சர் David Littleproud இந்த கோரிக்கையை வரவேற்றதுடன் புதிய விஸாவை அறிமுகம் செய்யும் திட்டத்தை கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். ஆனால், இதனை நிராகரித்த அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர்.
முக்கியமாக, உள்துறை அமைச்சர் Peter Dutton இந்த விஸா திட்டம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டுக்குள் வருவதற்கு மேலும் ஊக்குவிப்பதாக அமையும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து Pacific island labour திட்டத்தின் ஊடாக தொழிலாளர்களை வெளிநாட்டிலிருந்து மேற்படி வேலைகளுக்கு தருவிப்பது தொடர்பாக தற்போது ஆலோசித்துவருவதாக வேளாண்துறை அமைச்சர் David Littleproud கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்துள்ள ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Marise Payne, பசுபிக் திட்டமானது பசுபிக் பிராந்தியத்தில் சீன ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவினால் கையாளப்படும் திட்டம் என்றும் இந்த திட்டத்தின் வழியாக வெளிநாட்டு வேலையாட்களை நாட்டுக்குள் அனுமதித்தால் அது பசுபிக் திட்டத்தின் பூர்வாங்க நோக்கத்தையே சிதைத்துவிடும் என்றும் கூறியுள்ளார்.