$180,000ற்கும் அதிக சம்பளம் பெறுவோருக்குப் புதிய வீசா அறிமுகமாகிறது.

"உயர் தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் திறமை" கொண்டவர்களை ஆஸ்திரேலியாவிற்கு வர ஈர்ப்பதற்காக, மற்றைய நாடுகளுடன் போட்டியிடும் வகையில் ஒரு புதிய வீசாவை அரசு உருவாக்குகிறது. 180,000 டொலர்களுக்கும் மேலாக ஊதியம் பெறும் ஊழியர்களை ஆஸ்திரேலியாவிற்கு வரவைப்பதற்கும் குடியேற்றவும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

Australian visa

Australian visa Source: SBS

STEM என்று அறியப்படும் விஞ்ஞானம் (Science), தொழில் நுட்பம் (Technology), பொறியியல் (Engineering) மற்றும் கணிதம் (Mathematics) ஆகிய துறைகளில், சிறந்த திறமைகளைத் தேடும் புதிய நிறுவனங்கள் ஊழியர்களைக் கவர்வதற்காகவும் புதிய வீசா அறிமுகமாகிறது.

மூன்று வருட முன் அனுபவமுள்ளவர்களுக்கு மட்டுமே இந்த இரண்டு வீசாக்களும் வழங்கப்படும்.  அத்துடன், அவர்களுக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், அந்தத் திறமைகளை ஆஸ்திரேலியாவில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

"உயர் தொழில்நுட்பத் திறமைக்கு உலகளாவிய ரீதியில் கடுமையான போட்டி நிலவுகிறது என்பதை எமது அரசு ஏற்றுக் கொள்கிறது, மேலும் இந்தத் திறமை கொண்டவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையிலும், ஆஸ்திரேலியத் தொழிலாளர்களுக்கு அவர்கள் திறமைகளைப் பரிமாற்றம் செய்யவும், ஆஸ்திரேலிய வணிகங்களை வளர்க்கவும் இந்த திட்டம் உதவுகிறது," என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.

மொத்தமாக எத்தனை வீசாக்கள் வழங்கப்படும் என்ற வரையறை இருக்காது.  ஆனால், ஒரு தனிப்பட்ட நிறுவனம் எத்தனை பேரை இந்த வீசா மூலம் ஆஸ்திரேலியாவிற்கு வரவழைத்து, பணிக்கமர்த்தலாம் என்பதில் ஒரு உச்ச வரம்பு இருக்கும்.

புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனம்* ஒரு வருடத்தில் அதிகப்படியாக ஐந்து பேரையும், 20 திறமை வாய்ந்தவர்களை $180,000 சம்பளத்தில் மற்றைய நிறுவனங்களும்**, ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துவரும் வீசா பெற்றுக் கொடுக்க முடியும்.

* - புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனம் இதற்குத் தகுதி பெற்றுள்ளதா என்பதை அந்தத் தொழில்சார் அமைப்பு (industry body) தீர்மானிக்கும்.

** - வருடத்திற்கு 4 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைக் கொண்ட வணிக நிறுவனங்கள்.

இது குறித்த மேலதிக தரவுகள் வெளியாகும் போது அவற்றை நாம் எடுத்து வருவோம்.

 

 

 

 

 

Share
Published 19 March 2018 9:15am
Updated 19 March 2018 11:51am
By Kulasegaram Sanchayan


Share this with family and friends