நோய் இருந்தாலும் நிரந்தர விசா!

நோய் இருந்தாலும் நிரந்தர விசா வழங்க ஆஸ்திரேலிய அரசு இணக்கம்.

Medical examination for visa

Medical examination for visa Source: Getty Images

குடிவரவுத் துறை எடுத்துள்ள முடிவால், ஹெபடைடிஸ் (Hepatitis) எனப்படும் கல்லீரல் அழர்ச்சி நோய் உள்ளவர்கள் பயனடையப் போகிறார்கள்.

தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக இருக்கும் இந்த வைரஸ் தொற்றுநோய், குழந்தை பராமரிப்பு மற்றும் மருத்துவ சுகாதார தொழிலாளர்களிடையே பரவலாகக் காணப்பட்டாலும் அவர்களது நாளாந்த வாழ்க்கையை அதிகம் பாதிப்பதில்லை.

இப்படியான மருத்துவ நிலைமையில் உள்ள குடிவரவு விண்ணப்பதாரர்கள் ஆஸ்திரேலியாவின் சுகாதார செலவை அதிகரிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் கண்டறிந்துள்ளது.  அதைத் தொடர்ந்து, வீசா விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் முறையை ஜூலை மாதம் அரசு மாற்றியுள்ளது.  அத்துடன், இப்படியான மருத்துவ செலவுகளுக்கு 40,000 டொலர்கள் என்றிருந்த உச்ச வரம்பை, 49,000 டொலர்கள் என்று உயர்த்தியுள்ளது.  மேலும் மருத்துவ சுகாதார செலவை மதிப்பிடுவதற்கான கால அளவு ஒருவரின் வாழ்நாள் என்றிருந்த கால எல்லையை, வெறும் 10 ஆண்டுகள் என்று மாற்றப்பட்டதுள்ளது.  இதனால், இளையோர் குடிவருவதற்கான தடை குறைக்கப்படுகிறது.

அரசின் இந்த மாற்றங்களை Hepatitis Victoria அமைப்பின் நிர்வாகத் தலைவர் Melanie Eagle பாராட்டினார்.

“ஹெபடைடிஸ் பி (Hepatitis B) உள்ள எவரும் வீசா பெறுவதிலிருந்தோ அல்லது குடியேற முடியாமலோ தடுக்கப்பட மாட்டார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது.  10 ஆண்டுகளுக்குள் ஒருவரின் மருத்துவ செலவு அதிகரிக்க வாய்ப்பில்லை."

தென்கிழக்கு ஆசியாவில், 39 மில்லியன் மக்கள் நீண்டகாலமாக ‘ஹெபடைடிஸ் பி’ உடன் வாழ்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது.

கம்போடிய-ஆஸ்திரேலியர்கள் மற்றும் வியட்நாமிய-ஆஸ்திரேலியர்களில் எட்டு பேரில் ஒருவருக்கு இந்த நோய்த்தொற்று உள்ளது.

 

 

 

Share
Published 23 August 2019 9:00am
By Kulasegaram Sanchayan


Share this with family and friends