சீன மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் உளவு வேலை செய்கிறார்கள் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையில் இராஜதந்திர பதட்டம் நிலவுகிறது.
இதே வேளை சீன அரசு வழங்கும் புலமைப் பரிசுகள் மாணவர்களை ஆஸ்திரேலியா தவிர்த்து வேறு நாடுகளுக்கு அனுப்ப பயன்படுத்தப்பட வேண்டும் என்று சீன பத்திரிகை Global Times கருத்து வெளியிட்டுள்ளது.
முனைவர் பட்டம் பெறுவதற்காக அப்படி புலமைப் பரிசில் பெற்ற சில மாணவர்கள், ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் அனுமதி பெற்றிருந்தாலும் ஆறு மாதங்களுக்கும் மேலாக வீசா கிடைக்காமல் காத்திருக்கிறார்கள் என்று அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அவர்களது விசாக்கள் விரைவில் வழங்கப்படாவிட்டால், அவர்களின் புலமைப்பரிசில்கள் காலாவதியாகும். இது அவர்களின் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கும். இந்த மாணவர்களில் சிலர் மற்ற வாய்ப்புகளை நிராகரித்துள்ளனர், சிலர் அவர்களது வேலைகளை விட்டு விலகியுள்ளார்கள்.
இது குறித்து, உள்துறை அமைச்சை SBS தொடர்புகொண்டு கேட்டுள்ளது. பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
ஆனால், ABC ஊடகத்திற்கு வழங்கிய வேறோரு பதிலில், 2,630 சீன மாணவர்களுக்கு subclass 408 வீசாவும் 80,423 சீன மாணவர்களுக்கு subclass 500 வீசாவும் வழங்கப்பட்டுள்ளன என்றும், முறையே 99 மற்றும் 97 சதவீத விண்ணப்பதாரிகளுக்கு வீசா வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.