தேர்தல் தினத்தன்று ஆஸ்திரேலியா வந்த படகு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டது!

ஆஸ்திரேலிய தேர்தல் தினமான மே 21 அன்று, இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப்படை-Border Force தெரிவித்துள்ளது.

Illegal Boat

Source: AP/ Bruno Thevenin

கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில்வைத்து ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையினரால் தடுத்துநிறுத்தப்பட்ட குறித்த படகிலிருந்தவர்கள், மருத்துவ மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நேற்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக கட்டளை அதிகாரி Rear Admiral Justin Jones தெரிவித்துள்ளார்.

லேபர் ஆட்சியின் கீழும் படகு மூலம் ஆஸ்திரேலியா வருபவர்கள் தொடர்பிலான Operation Sovereign Borders கொள்கையில் மாற்றமில்லை எனவும், படகு மூலம் ஆஸ்திரேலியா வருபவர்கள் பாதுகாப்பான சூழ்நிலைமையின்கீழ் திருப்பி அனுப்பப்படுவார்கள் அல்லது கடல்கடந்த தடுப்பு மையத்திற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் Rear Admiral Justin Jones குறிப்பிட்டுள்ளார்.

குறித்த படகில் வந்தவர்கள் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட செய்தியை லேபர் கட்சியின் கருவூலக்காப்பாளர்  Richard Marles உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேநேரம் இலங்கையிலிருந்து வந்த படகு குறித்த செய்தியை, லிபரல் தலைமையிலான அரசு, தேர்தல் நாளன்று வெளியிட்டமையானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயம் என, Richard Marles தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியடங்கிய ஊடக அறிக்கை பொதுவெளியில் பகிரப்பட்டதன் பின்னணி தொடர்பில் விசாரணை நடத்துமாறு உள்துறை அமைச்சின் செயலர் Michael Pezzullo-வுக்கு புதிய அரசு உத்தரவிட்டுள்ளது.

லிபரல் கூட்டணி அரசு, தேசிய நலனைவிட தமது சுயலாபத்திற்கே முன்னுரிமை கொடுப்பவர்கள் என்பதை இச்சம்பவம் வெளிப்படுத்திநிற்பதாக Richard Marles கூறியுள்ளார்.

இதேவேளை படகு மூலம் வந்த அகதிகளைத் திருப்பியனுப்பியுள்ள லேபர் அரசின் செயல் ஏமாற்றமளிப்பதாக, கிரீன்ஸ் கட்சியின் குடிவரவு விவகாரங்களுக்கான பேச்சாளர் Nick McKim தெரிவித்துள்ளார்.

புகலிடம்கோரி வந்தவர்களை திருப்பியனுப்புவது மனிதாபிமானமற்றது என்பதுடன் சர்வதேச சட்டத்திற்கு முரணானது எனவும் Nick McKim கூறியுள்ளார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 25 May 2022 1:42pm
Updated 25 May 2022 1:47pm

Share this with family and friends