அனைத்து வளங்களும் ஆஸ்திரேலியாவில் இருக்க, ஏன் மின்சாரவாகனம் இங்கு தயாரிக்கவில்லை?

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் மின்சாரக் காருக்காக வெளிநாட்டை நம்பியிருக்கவேண்டும் என்று நாம் நினைக்கக்கூடும்.

Electric vehicle

Electric vehicle charging Source: AP

ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி தற்போது சீனா, இந்தியா போன்ற நாடுகளைப்போல மோட்டார் வாகனங்களுக்கான விசாலமான சந்தை வாய்ப்புகள் ஆஸ்திரேலியாவுக்கு இல்லை. நாட்டின் மக்கள்தொகை மிக குறைவு என்பதே முக்கிய காரணம் என்று ஒற்றை வரியில் இதற்கு பதில் சொல்லிவிடலாம்.

புவியியல் ரீதியாக மிகத்தொலைவில் ஆஸ்திரேலியா இருப்பதாலும், நீண்ட தூரங்களுக்கு transport - எடுத்துச்செல்ல அதிக செலவாகும் என்பதாலும் இங்கு வேதனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நடத்துவதில் இருக்கும் மேலதிக கட்டுப்பாடுகள், செலவுகள் என்பன காரணமாகவும் மற்ற நாடுகளின் விலைகளுடன் ஆஸ்திரேலியாவில் தயாராகும் கார்களினால் போட்டிபோடமுடியாது. நிச்சயம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகளுடனும் போட்டியிடமுடியாது. ஆகவே இங்கு வாகன உற்பத்தி சாத்தியமில்லை என்ற முடிவுக்கு பல கார் தயாரிக்கும் நிறுவனங்கள் வந்தன.

Mitsubishi, Toyota , Holden என்பன இங்கு வாகனங்களை உற்பத்தி செய்தபோது பொதுவாக தலா ஒவ்வொரு மாடல்களை மட்டுமே அவை தயாரித்தன. Mitsubishi, Magna வைத் தயாரித்தது. Toyota, Camryஐத் தயாரித்தது. Holden, Commodore ஐத் தயாரித்தது. ஆனால் அதையும் இந்த நிறுவனங்களால் தொடரமுடியவில்லை.

தென்கொரிய நிறுவனமான Hyundai, 30 இற்கும் அதிகமான வேறுபட்ட தேவைகளுக்கான மாடல்களை சர்வதேசரீதியாக இப்போது சந்தைப்படுத்துகிறது. எங்கு உற்பத்தி செலவு குறைவாக இருக்கிறதோ அங்கு தமது உற்பத்தி நிலையங்களை நிறுவிவருகிறது. அதன் சகோதர நிறுவனமான KIA உம் 32 இற்கும் மேற்பட்ட வேறுபட்ட மாடல்களை வெவ்வேறு சந்தைகளுக்காகத் தயாரிக்கிறது. இந்த நிறுவனங்களும் ஆஸ்திரேலியாவில் ஆலைகளை நிறுவவில்லை. எனவே மோட்டார் வாகனங்களை இங்கு தயாரிப்பதற்கான சாத்தியங்கள் முற்றிலும் இல்லாமல் போனது.

மின்கார்கள் தயாரிக்க அத்தியாவசியமாக தேவைப்படும் Lithium என்ற தாது - வளம் ஆஸ்திரேலியாவில் அதிகமாகவே உள்ளது.

பெட்ரோல், டீசல் கார்களை தயாரிக்கும் சாத்தியம் இல்லை என்றாலும், இனி EV -மின்கார்களின் அறிமுகம், அவை தொடர்பாக மக்களின் ஆர்வம் என்பன காரணமாக ஆஸ்திரேலியா மீண்டும் களத்தில் குதிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக பலரும் நம்புகிறார்கள். இத்தகைய கார்களை தயாரிக்க அத்தியாவசியமாக தேவைப்படும் Lithium என்ற தாது - வளம் ஆஸ்திரேலியாவில் அதிகமாகவே உள்ளது.

electric car
An electric car gets charged at a supermarket carpark in Sydney, Australia, Tuesday, Nov. 9, 2021. Source: AAP, AP / AAP Image/AP Photo/Mark Baker

Lithium என்ற தாது, மடிக்கணனி, மொபைல் போன், EV என்ற மின்வாகனங்கள் என்பவற்றுக்குத் தேவையான பட்டரிகளைச் செய்ய மிக அத்தியாவசியமானதாகும். மேற்கு ஆஸ்திரேலியாவில் Green Bushes என்ற சுரங்கத்தில் 1980 இல் Lithium இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அது அப்போதைய நிலையில் பயனற்ற ஒரு கனிமமாகவே பார்க்கப்பட்டது. அப்போது அது சொற்ப அளவில், கண்ணாடி, ceramic, lubricant போன்றவற்றிற்கு மெருகேற்றும் ஒரு கனிமமாகவே பார்க்கப்பட்டது. 

கரியமிலவாயு வெளியேற்றத்தைத் தடுக்குமுகமாக உலகிலுள்ள சுமார் 1.5 பில்லியன் பெட்ரோல் வாகனங்களை படிப்படியாக எடுத்துவிட்டு EV வாகனங்களை அறிமுகம் செய்ய உலக நாடுகள் முற்பட்ட வேளையில், Lithium புதிய அந்தஸ்தைப் பெற்றது.

புவி வெப்பமடைவதை தடுப்பது தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதற்கு இப்போது உலக நாடுகளுக்கு தேவைப்படும் லித்தியம் தாது, எதிர்காலத்தில் 40 மடங்கு தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Lithium ore falls from a chute onto a stockpile
Lithium ore falls from a chute onto a stockpile at a facility in Australia. Photographer: Carla Gottgens/Bloomberg Credit: Bloomberg Creative Photos/Getty Images/Bloomberg Creative

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஆஸ்திரேலிய Lithium இன் விலை உலக சந்தையில் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. சுத்திகரிக்கப்படாத Lithium spodumene இன் விலை இன்று ஒரு டன் 5000 அமெரிக்க டாலர்களாகும். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு டன்னின் விலை 415 அமெரிக்க டாலர்களாக இருந்தது. உலகத்தேவைகளில் 40 சதவீதமான Lithium ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு தோண்டியெடுக்கப்படும் Lithium இத்தின் பெரும்பகுதி மேற்கு ஆஸ்திரேலியாவில் Green Bushes என்ற சுரங்கத்திலிருந்து வந்தாலும் மிகுதி 60 சதவீதம் Kalgoorlie, Pilbara, மற்றும் Darwin ஆகிய இடங்களிலுள்ள சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படுகிறது.

சிலே, சீனா ஆகிய நாடுகளிலும் Lithium Hydroxide பிரித்தெடுக்கப்படுகிறது. உலகில் எடுக்கப்படும் lithium இன் 80 சதவீதம் சீனாவிலேயே சுத்திகரிக்கப்படுகிறது. தென் அமெரிக்காவில் Argentina, Bolivia ஆகிய நாடுகளும் Lithium த்தை ஏற்றுமதி செய்கின்றன.

ஆஸ்திரேலியாவில் நாம் சுரங்கப் பாறைகளை உடைத்து lithium த்தை பிரித்தெடுக்கிறோம். ஆனால் தென்னமெரிக்க நாடுகளில் உப்பு நீரை உறைய வைத்து Lithium பிரித்தெடுக்கின்றனர். எனவே Lithium சுரங்கங்கள் தோண்டப்படுவதன் காரணமாக சுற்றாடல் மாசுபடுவது என்பது தவிர்க்க முடியாத பக்க விளைவாகும். ஆனால் நிலக்கரி சுரங்கங்களோடு ஒப்பிடும்போது பாதிப்பு குறைவு என்றே இந்த துறைசார் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

Volkswagen ID.3 Electric Car Production In Dresden
DRESDEN, GERMANY - JUNE 08: A Volkswagen employee demonstrates the charging of a Volkswagen ID.3 electric car outside the "Gläserne Manufaktur" ("Glass Manufactory") production facility on June 08, 2021 in Dresden, Germany. The Dresden plant is currently churning out 35 ID.3 cars per day. The ID.3 and ID.4 cars are also produced at VW's Zwickau plat located in the same region. (Photo by Sean Gallup/Getty Images) Credit: Sean Gallup/Getty Images

ஆஸ்திரேலியாவில் லித்தியம் அதிகம் கிடைப்பதால் Lithium ஐப் பயன் படுத்தி இங்கு மின்கார்களை தயாரிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, கடந்தவருடம் லேபர் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் Anthony Albanese உரையாற்றும் போது, ‘we can be a renewable energy superpower’ என்று அறிவித்தார்.

இதற்கு நான்கு மாதங்களின் பின் Tesla நிறுவனத்தின் தலைவர் Robyn Denholm கருத்து தெரிவிக்கும் போது, ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் Lithium காரணமாக ஆஸ்திரேலியா மின்கார்களை தயாரிக்கவேண்டும்; தயாரிக்கமுடியும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து சில நாட்களில் எரிசக்தித் துறை அமைச்சர் Chris Bowen, ‘எங்களால் EV - மின்சார கார்களை தயாரிக்க முடியும் என்று நான் நம்புவது மட்டுமல்ல EV தயாரிப்பாளர்களும் நம்புகிறார்கள்’ என்றார். 

ஆஸ்திரேலியாவில் மின்கார்களை தயாரிக்கும் சாத்தியங்கள் அதிகரித்திருந்தாலும் அது அவ்வளவு இலேசானதல்ல என்பதே உண்மை நிலைமையாகும்.

உலகில் நாற்பது சதவீதமான lithium த்தை ஆஸ்திரேலியா தோண்டி எடுத்தாலும், இவற்றை இங்கு சுத்திகரித்து பட்டரிகள் செய்வதற்கான மூலப்பொருளாக Lithium Hydroxide ஆக அதை மாற்றும் வசதியில்லை. இது சீனாவிலேயே நடக்கிறது. இங்கிருந்து உடைக்கப்பட்ட பாறைகள் சீனாவுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்த உடைக்கப்பட்ட பாறைகளில் 6 சதவீதம் மட்டுமே லிதியம். மற்றதெல்லாம் உபயோகமற்ற பாறைகள். 100 டன் ஏற்றுமதிசெய்தால் 6 டன் மட்டுமே லிதியம்.

இப்படி சுத்திகரிக்கப்பட்ட Lithiumத்தை பெரிய மின்சார கார்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்க ஆஸ்திரேலிய சுரங்க கம்பனிகள் நீண்ட கால ஒப்பந்தங்களை செய்திருக்கின்றன. ஆகவே இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் Lithium, பின்னர் மின்சார கார்களுக்கு தேவைப்படும் பட்டரிகளாகத்தான் இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. லித்தியத்தை இங்கு பட்டரியாக தயாரிப்பிற்கு அல்லது பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

Tesla நிறுவனம் தனது மின்சார கார்களுக்கு தேவைப்படும் 75 சதவீதமான பட்டரிகளுக்கு, ஆஸ்திரேலிய lithium தையே நம்பி இருக்கிறது. ஆஸ்திரேலியா ஒருவேளை மின்சார கார்களுக்கு - EV களுக்கான பட்டரிகளைத் தயாரிக்க ஆரம்பிக்கும் போது, பல வருடகாலமாக லித்தியம் பட்டரிகளைத்தயாரிக்கும் பல நிறுவனங்கள், விலைகுறைந்த, ஆற்றல் மிக்க, எடைகுறைந்த பட்டரிகளை சந்தைப்படுத்தும் கட்டத்தில் இருப்பார்கள். ஏனெனில் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது பேட்டரி தயாரிப்பு தொழில்நுட்பத்தில் ஆஸ்திரேலியா மிக மிக பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
Selective focus of Electric car lithium battery pack and wiring connections internal between cells
Selective focus of Electric car lithium battery pack and wiring connections internal between cells Source: Moment RF / Prapass Pulsub/Getty Images
அத்தோடு இங்கு ஆரம்பிக்கப்படும் Lithium சுத்திகரிப்பு நிலையங்கள் எமக்குச் சொந்தமானதல்ல. Kwinana வில் ஆரம்பிக்கப்படும் Tianqi நிலையம் சீனாவினால் ஆரம்பிக்கப்படுகிறது. அமெரிக்க Albermarle மற்றும் Chile யின் SQM ஆகிய நிறுவனங்கள் Lithium சுத்திகரிப்பு நிலையங்களை இங்கு நிறுவி வருகின்றன. ஆனால் இங்கு சுத்திகரிக்கப்படும் lithium hydroxide இங்கு தயாரிக்க உத்தேசித்துவரும் EV வாகனங்களுக்கு கிடைக்காது. சீன Tianqi நிறுவனம் தாம் சுத்திகரித்து எடுக்கும் lithium hydroxide ஐ Swedish நிறுவனமான North Volt இற்கு, Volvo, BMW, Volkswagen போன்ற கார்களின் பட்டரிகளைத் தயாரிப்பதற்கு வழங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.

பிரபல மின்சார கார் - EV தயாரிப்பாளர்கள் இங்கு வந்து EV தயாரிக்க ஆர்வம் காட்டவில்லை. அதற்கு போதுமான சூழல், வசதி என்பன இல்லை என்றே அவர்கள் கருதுகிறார்கள். ஆகவே ஆஸ்திரேலியா மின்சார கார் - EV தயாரிப்பதென்றால், புதிய brand ஒன்றை ஆரம்பிக்கவேண்டும். அப்படி புதிய brand வாகனமொன்றை ஆரம்பித்து அதை மக்கள் மத்தியில் பிரபலப் படுத்தி நம்பகத்தன்மையை ஏற்படுத்த பாரிய கட்டமைப்பை உருவாக்கவேண்டும். அதற்கு பாரிய மூலதனமும் தொழில்நுட்ப கட்டமைப்பும் வேண்டும்.

ஆஸ்திரேலியா storage battery களை ஏற்கனவே தயாரிக்கிறது. Felines, Gelion, Redflow போன்ற நிறுவனங்கள் battery cells களைத் தயாரிக்கின்றன. இவை solar energy ஐ சேமிக்கும் பட்டரிகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன. Read Earth, Poweplus போன்ற நிறுவனங்களும் energy saving battery களையே தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனாலும், விக்டோரியா மாநிலத்திலுள்ள SEA Electric என்ற நிறுவனம், ஐரோப்பிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சுரங்கத்தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய 8500 Toyota Hilux மற்றும் Landcruiser வாகனங்களிலுள்ள combustion engine என்ற பெட்ரோல் என்ஜின் களை அகற்றிவிட்டு அவற்றை மின்சார கார் - EV ஆக மாற்றும் பணியை Dandenongஇல் ஆரம்பித்துள்ளது. 

RDA - Regional Development Australia வைச்சேர்ந்த Colleen Yates கருத்து தெரிவிக்கும் போது, நாம் grid மற்றும் solar panel களில் இருந்து சக்தியைச் சேமிக்கும் battery களைத் தயாரிப்பதிலேயே அக்கறை செலுத்தவேண்டும். மின்சார கார் - EV இக்கான battery களைத் தயாரித்து இங்கு மின்சார கார்களைத் தாயரிப்பதில் பெரும் நிறுவனங்கள், பிரபல brand களுடன் ஆஸ்திரேலியா போட்டிபோட முடியாது என்று கூறியிருக்கிறார்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 17 February 2023 9:18am
By R.Sathiyanathan
Source: SBS

Share this with family and friends