Partner Visa விண்ணப்பதாரிகளுக்கு ஆங்கிலப்பரீட்சை- குடிவரவு அமைச்சர் விளக்கம்!

sbs

Source: SBS

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும்போது முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு சரியான வழிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளமுடியாதிருப்பது மற்றும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போதிருக்கின்ற சிக்கல் போன்றவற்றுக்கான தீர்வாக, Partner visa மூலம் ஆஸ்திரேலியா வருபவர்கள் தமது ஆங்கிலமொழிப்புலமையை நிரூபிக்க வேண்டுமென அரசு எதிர்பார்ப்பதாக குடிவரவு அமைச்சர்(acting) Alan Tudge தெரிவித்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவிலுள்ள தமது துணையுடன் இணைவதற்காக Partner visa ஊடாக  வருபவர்களும் அவர்களை ஸ்பொன்சர் செய்யும் மணத்துணையும் தமது ஆங்கிலமொழிப்புலமையை நிரூபிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சு அறிவித்துள்ளமை குறித்து அமைச்சர் Alan Tudge சில மேலதிக விளக்கங்களை தெரிவித்துள்ளார்.
 
"ஆஸ்திரேலிய பணியிடங்களில் 62 சத வீதமானவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக உள்ள சூழலில் 13 வீதமானவர்கள் முற்றாகவே ஆங்கிலம் பேச முடியாதவர்களாக உள்ளார்கள் என்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
வேலையிடங்களிலும் வேறு இடங்களிலும் தொடர்பாடல் என்பது இடைவெளியை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
 
Partner visa விண்ணப்பதாரிகள் ஆங்கிலப்பரீட்சையை சித்தியடைந்தால்தான் விசா வழங்கப்படும் என்றில்லை. அவர்கள் ஆங்கிலத்தை பயில்வதில் ஆர்வத்துடன் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை நிரூபித்தால்- உதாரணமாக Adult Migration English Program போன்ற செயற்றிட்டமூடாக 500 மணித்தியால வகுப்பில் கலந்துகொள்கின்றமை போன்ற விடயங்களை உறுதிசெய்துகொண்டாலே போதும்" -
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
இதேவேளை Partner visa தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற மாற்றங்கள் குறித்த மேலதிக விபரங்கள் அடுத்துவரும் மாதங்களில் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Share
Published 8 October 2020 3:46pm
Updated 8 October 2020 3:49pm

Share this with family and friends