Partner visa விண்ணப்பதாரிகளுக்கு ஆங்கிலமொழிப் பரீட்சையொன்றை அறிமுகப்படுத்த அரசு உத்தேசம்!

Australian Visa

Source: SBS

Partner visa ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியேற விண்ணப்பிப்பவர்கள் தமது ஆங்கிலமொழிப்புலமையை நிரூபிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையைக் கொண்டுவர அரசு உத்தேசித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு நேற்றைய நிதிநிதிலை அறிக்கையில் வெளியானது.

2020-21 நிதிநிலை அறிக்கையின்படி ஆஸ்திரேலியாவுக்குள் ஆண்டுதோறும் உள்வாங்கப்படுவோரின் எண்ணிக்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 160000 என்ற அளவிலேயே தொடர்ந்தும் பேணப்படவுள்ளததுடன் இதன்கீழ் family reunion stream-க்கான இடங்கள் 47,732 இலிருந்து 77,300 ஆக அதிகரிக்கப்படுகிறது.

இதில் 72,300 இடங்கள் partner visa பிரிவுக்கு ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அதிக இடங்கள் partner visa பிரிவுக்கு ஒதுக்கப்படுவது சிறந்தவிடயம் என்றாலும், இதற்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலமொழிப்புலமையை நிரூபிக்க வேண்டுமென்ற முன்மொழிவு எவரும் எதிர்பார்த்திராத ஒன்று என குடிவரவு முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிபந்தனையானது பல தம்பதிகள் தமது மணத்துணையுடன் சேர்வதை சவால்மிக்கதாக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம் யாரும் எதிர்பார்த்திராவகையில் வெளியான இந்த முன்மொழிவு ஆஸ்திரேலிய அரசின் கோர முகத்தைக் காட்டுவதாக எதிர்கட்சியான லேபர் கட்சி சாடியுள்ளது.

இதுதொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன், ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களது அடிப்படை ஆங்கில அறிவை பரிசோதிக்கும் எளியதொரு நடைமுறையாக இது அமையும் எனவும், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் அனைவரும் சமூகத்திலுள்ள ஏனையவர்களுடன் நல்லுறவைப் பேணும் வகையிலும் நாட்டிலுள்ள சேவைகளை தடையின்றிப் பெறும் வகையிலும் அடிப்படை ஆங்கில அறிவைக்கொண்டிருக்க வேண்டுமென தமது அரசு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அரசின் இப்புதிய அறிவிப்புக்கு பல்வேறு தரப்புக்களிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ள பின்னணியில் இதை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் அரசு பாரிய சவாலை எதிர்கொள்ளும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Share
Published 7 October 2020 4:16pm
Updated 7 October 2020 4:21pm

Share this with family and friends