கிட்டத்தட்ட இரு ஆண்டுகளாக சர்வதேச பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால், காலாவதியான தமது கடவுச்சீட்டுக்களைப் பலர் புதுப்பித்திருக்கவில்லை என்பதாலும், புதிதாக குடியுரிமைபெற்ற பலர் கடவுச்சீட்டுக்களைப் பெறுவதற்காக தற்போது விண்ணப்பிப்பதாலும், தினமும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கவேண்டியுள்ளதாக கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு விண்ணப்பங்களைப் பரிசீலித்து அவற்றை வழங்குவதில் நிலவும் நீண்ட தாமதம் காரணமாக, பலர் தமது வெளிநாட்டுப் பயணங்களை ரத்துச்செய்யும் நிலைக்கு அல்லது பிற்போடும் நிலைக்கு தள்ளப்படுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
பெருமளவான மக்கள் கடவுச்சீட்டு அலுவலகங்களில் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் அதேநேரம் தமது விண்ணப்பம் என்னநிலையில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள தொலைபேசியில் நீண்டநேரத்தை செலவிடுகிறார்கள்.
இப்படியாக உரிய நேரத்தில் கடவுச்சீட்டைப்பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சிறீநித் குலங்காரத்தும் அடங்குகிறார்.
சிறீநித்தின் மகனது கடவுச்சீட்டு காலாவதியாகிவிட்டதாகவும், இதற்காக கடந்த மே மாதம் 5ம் திகதி விண்ணப்பித்தபோதிலும் இன்னமும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் தனது மனைவியின் தந்தை இந்தியாவில் காலமாகிவிட்டதாகவும், மனைவியுடன் சேர்ந்து தானும் மகனும் இந்தியாவிற்குச் செல்ல முடியாதநிலை ஏற்பட்டதால் மனைவி மாத்திரம் அங்கே புறப்பட்டுச்சென்றுள்ளதாகவும், சிறீநித் குறிப்பிட்டார்.

Sreenith Kulangarath outside the Sydney passport office where hundreds of people are waiting. Source: SBS News/Supplied
இந்த துயரமான தருணத்தில் தனது மனைவிக்கு அருகில் நிற்கமுடியாததையிட்டும், மாமனாரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாததையிட்டும் தான் மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சிறீநித், கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 10 மணிநேரங்கள் கடவுச்சீட்டு அலுவலக வாசலின்முன்பு வரிசையில் காத்திருந்தபோதிலும் அது பலனளிக்கவில்லை என விசனம் தெரிவித்தார்.
மகனது கடவுச்சீட்டு விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிப்பதற்குரிய கூடுதல் கட்டணத்தைச் செலுத்தியிருந்தபோதிலும், உரிய நேரத்தில் கடவுச்சீட்டு கிடைக்கவில்லை எனவும் சிறீநித் தெரிவித்தார்.
கடவுச்சீட்டுக்களைப் பெறுவதில் நிலவும் நீண்ட தாமதத்திற்கு கடந்த அரசே காரணம் எனவும், பெருமளவு விண்ணப்பங்கள் தேங்கிக்கிடப்பதாகவும் துணை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை நிலைமையை சீர்செய்வதற்கு சுமார் 250 மேலதிக பணியாளர்கள் கடவுச்சீட்டு விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.