மூன்று வருடங்களுக்கு முன்னர் இணையமெங்கும் வைரலாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த "குத்துச்சண்டை கங்காரு" (Buff kangaroo) உயிரிழந்தது.
2006 ஆம் ஆண்டு பகுதியில் Alice Springs-இல் இடம்பெற்ற வீதிவிபத்தொன்றின்போது தனது தாயை இழந்த இந்தக்கங்காரு வழிப்போக்கர் ஒருவரால் தத்ததெடுக்கப்பட்டு Roger என்று பெயர் சூட்டப்பட்டு அவரது வீட்டிலேயே வளர்க்கப்பட்டுவந்தது.
2015 ஆம் ஆண்டு Roger தகரவாளியொன்றினை இரு முன்கால்களுக்கிடையில் நசுக்கி துவம்சம் செய்யும் காட்சி இணையமெங்கும் பரவி வைரலானது.
அன்றுமுதல் சமூகவலைத்தளங்கள் எங்கும் Roger -க்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பெருகினர். ஆஸ்திரேலியாவின் பிரபலமானதும் பெருமைக்குரிய கங்காருவுமானது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக Roger-இன் உடல் வலுக்குன்றியது. யாரும் அருகில் சென்று தொட்டுப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றளவுக்கு பலமிழந்த Roger, கடந்த சனிக்கிழமை தனது 12 ஆவது வயதில் Alice Springs பகுதியில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் உயிரிழந்தது.
இறக்கும்போது அது ஆறு அடி உயரமும் 89 கிலோவுமுடைய நிறைவான கங்காருவாகவே காணப்பட்டது என்கிறார்கள் சரணாலய காப்பாளர்கள்.
Roger-இன் இழப்புக்கு சமூக வலைத்தளமெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கவலை தெரிவித்துவருகிறார்கள்.