OCI அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியாவுக்குச் செல்லும் போது, அந்த அட்டையிலுள்ள கடவுச்சீட்டு இலக்கம் (Passport number), அவர்கள் கைகளிலிருந்த கடவுச் சீட்டு இலக்கத்தை ஒத்ததாக இல்லாவிட்டால் பயணம் செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பல குடும்பங்கள் அப்படிப் பயணிக்க முடியாமல் போனது என்று பல செய்திகள் வெளியாகியிருந்தன.
சில சமயங்களில், அவர்களது ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு புதிதாகப் பெறப்பட்டதாக இல்லாவிட்டாலும், விமான நிறுவனம் அவர்கள் பயணம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
கான்பராவிலுள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வருடாந்திர பொங்கல் விழாவில் இந்திய தூதரகத்தில், துணை தூதுவராகப் பணியாற்றும் திரு பி. எஸ். கார்த்திகேயன் கலந்து கொண்டார். அங்கு அவரை சந்தித்த நாம், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இது குறித்துக் கேட்டோம்.
“மிக மோசமான நிலை என்ற பீதியைத் தோற்றும் செய்தியை ஊடகங்கள் பரப்பியிருந்தன. உண்மை அதுவல்ல. அந்த நேரத்தில் செல்லுபடியாகாத OCI அட்டைகளுடன் பயணித்த சிலர் தனிமைப்படுத்தப்பட்டார்கள். வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பயணிக்க அனுமதிக்காததால் அவர்களுக்குச் சில சிக்கல்கள் இருந்தன.” என்று OCI அட்டை வைத்திருக்கும் சில பயணிகளின் அனுபவங்களைப் பற்றி கேட்ட போது திரு கார்த்திகேயன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “ஏர் இந்தியா அவர்களை அனுமதித்து வருகிறது - அவர்கள் பயணிக்க அனுமதித்தது, அது எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட போதெல்லாம், பயணத்தை எளிதாக்குவது சம்பந்தமாக நாங்கள் விமான நிறுவனங்களுடன் பேசியிருந்தோம். ஆனால் OCI அட்டைகள் எப்போது செல்லுபடியாகும் என்பது குறித்து அனைத்து OCI அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தன என்பதே உண்மை” என்றார்.

P. S. Karthigeyan, Deputy High Commissioner; High Commission of India, Canberra Source: SBS Tamil
“செல்லுபடியான கடவுச்சீட்டுகளை பயணிகள் வைத்திருக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறப்பட்டது - 20 வயதிற்குட்பட்டவர்களின் கடவுச்சீட்டு புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு முறையும் அவர்களது OCI அட்டைகளும் புதுப்பிக்கப் பட வேண்டும்; 20 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள், வெளிப்படையாக மாற்ற வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அவர்கள் பயணிக்க செல்லுபடியான OCI அட்டை போதுமானது; 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமது கடவுச்சீட்டைப் புதுப்பித்தால், அவர்கள் தங்களது OCI அட்டைகளையும் புதுப்பிக்க வேண்டும். ”
இந்த தகவல்கள் பிரதான ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் இந்திய தூதராலயத்தின் சொந்த வலைத்தளம் மற்றும் செய்தி வெளியீடுகள் மூலம் பகிரப்பட்டதாக திரு கார்த்திகேயன் கூறினார். சில வாரங்களுக்கு முன்னர், 2019 டிசம்பரில் தாம் வெளியிடப்பட்ட ஊடக செய்திக் குறிப்பை அவர் எங்களுக்கு அனுப்பியிருந்தார்.
OCI அட்டை வைத்திருப்பவர்கள் அதற்கான அனைத்து தேவைகளைப் பூர்த்தி செய்யா விட்டாலும், அவர்கள் பயணிக்க ஒரு சிறப்பு விதிவிலக்கு சில மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். இருந்தாலும், இந்த ஆண்டின் நடுப்பகுதியுடன் அந்த சலுகை நீக்கப்படும். “எனவே, உங்கள் வானொலியூடாக நான் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், பழைய OCI அட்டைகளை வைத்திருப்பவர்கள் அவற்றை புதுப்பிக்க வேண்டும். நிச்சயமாக, நான் சொல்வது ஒன்று புதிய செய்தி அல்ல. இது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை நாங்கள் வழங்கியுள்ளோம். வேண்டியவர்கள் அவற்றைப் பார்க்க வேண்டும், அதில் குறிப்பிட்ட எந்தப் பிரிவில் அவர்கள் அடங்குவார்கள் என்பதைப் பார்த்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விரைவாகச் செய்ய வேண்டும், கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம். இந்தியாவிற்குப் பயணிக்க வேண்டிய தேவை எப்பொழுது எழும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி ஒரு தேவை, அவசர காரணங்களுக்காக எழுந்தால் அதன் பின்னர் இது குறித்து சிந்திப்பதில் பயனில்லை. அப்படியான சிக்கலில் மாட்டிக் கொண்டால் வேறு யாரும் தலையிடுவது மிகவும் கடினம்” என்று திரு கார்த்திகேயன் அறிவுறுத்தினார்.

Press Release, High Commission of India, Canberra Source: Supplied