ஆஸ்திரேலியாவின் சிட்னி விமானநிலையத்தில் கணவாய், காடை, பன்றி இறைச்சி, பூண்டு, மிளகாய் என பல பொருட்களுடன் வந்திறங்கிய வியட்நாமிய பெண்(45) ஒருவருடைய விசா ரத்து செய்யப்பட்டு அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
மேற்குறிப்பிட்ட பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவருவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பொருட்கள் தன்னிடம் இருப்பதை Incoming Passenger Card-இல் அவர் குறிப்பிடவில்லை எனவும், விமானநிலைய அதிகாரிகள் எழுந்தமானமாக பரிசோதித்தபோது அவரது பயணப்பையில் இப்பொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அவரது பயணப்பையில் 4.5கிலோ பன்றியிறைச்சி காணப்பட்டதாகவும் இதன்மூலம் நாட்டுக்குள் African swine fever-ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் பரவுவதற்கான ஆபத்து ஏற்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் சகல வெளிநாட்டு விமான நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி, ஆஸ்திரேலியாவுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டுவருபவர்கள் அல்லது Incoming Passenger Card-இல் பிரகடனம் செய்யாது பொருட்களை கொண்டுவருபவர்களின் விசாக்காலம் குறைக்கப்படவும் வேண்டுமானால் ரத்துச்செய்யப்படவும் முடியும்.
அந்த அடிப்படையில் குறித்த வியட்நாமியப் பெண்ணின் விசா ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் ஆஸ்திரேலியாவிலுள்ள பன்றிகளைத் தாக்கும்பட்சத்தில் அதனால் பாரிய இழப்புக்கள் ஏற்படும் எனத் தெரிவித்த விவசாயத்துறை அமைச்சர் Bridget McKenzie இதனைக் கட்டுப்படுத்த விமானநிலையங்களில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் எவரேனும் தடைசெய்யப்பட்ட பொருட்களை பிரகடனம் செய்யாமல் எடுத்துவந்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.