“இது புலிகளின் காலம்” என்று சரித்திரத்தில் எழுதுகிறது ஆஸ்திரேலிய அஞ்சல் துறை. சீனப் புத்தாண்டை வரவேற்க, இந்த வருட சின்னமான புலியின் திருவுருவம் தாங்கிய புதிய தபால் முத்திரைகளை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
எருது ஆண்டிலிருந்து புலி ஆண்டாக மாறுவதைக் குறிக்கும் வகையில் இன்று “சந்திர புத்தாண்டு” (Lunar New Year) தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டையும் ஒவ்வொரு விலங்கு குறித்து நிற்கிறது. குறிக்கோளை எட்டமுடியும் என்ற நம்பிக்கையை இந்த ஆண்டைக் குறிக்கும் “புலி” தருவதாகக் கூறப்படுகிறது.
அதிர்ஷ்ட சின்னங்களான பூனைகளை மனதில் வைத்து வரையப்பட்டவை
சிட்னியைச் சேர்ந்த வரைபடக் கலைஞர் Chrissy Lau வடிவமைத்த தபால் முத்திரைகள் சீன மற்றும் ஜப்பானிய கலாச்சாரத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிர்ஷ்ட சின்னங்களான பூனைகளை மனதில் வைத்து வரையப்பட்டவை. அவை போன்றே, இந்த புலி முத்திரைகள் “அதிர்ஷ்ட புலிகள்” போல தோற்றமளிக்கின்றன.
“அதிர்ஷ்ட பூனைகளை, நீங்கள் பல ஆசிய கடைகளில் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். செல்வத்தை ஈர்ப்பதே அந்த அதிர்ஷ்ட பூனைகளின் முக்கிய செயல்பாடு” என்கிறார் Chrissy Lau.
“இந்த வரைபடம் கீழைத்தேய கலாச்சாரத்தில் மட்டுமன்றி மேற்கத்திய கலாச்சாரங்களுக்கும் பொதுவான ஒரு படம். பன்முக கலாச்சாரத்தின் ஒரு சின்னம்.”

Year of the Tiger 2022 stamps Source: Australia Post
மூன்று மதிப்புகளில் அதிர்ஷ்ட புலி முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு ப்ளம் (plum) மலரைக் கையிலேந்திய புலி $1.10 முத்திரையில் இடம் பெற்றுள்ளது. “இது சீன கலாச்சாரத்தில் நம்பிக்கை மற்றும் உறுதியைக் குறிக்கிறது” என்கிறார் Chrissy Lau.
$2.20 மதிப்புள்ள முத்திரையில், “அதிர்ஷ்டம்” என்று மொழிபெயர்க்கப்படும் “ஃபு” என்ற சீன எழுத்தை வைத்திருக்கும் புலி மற்றும் பாரம்பரிய சீன கலாச்சாரத்தில் தீய ஆவிகளை விரட்டப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் இடம்பெற்றுள்ளன.
நீண்ட ஆயுளைக் குறிக்கும் சீன முடிச்சைப் பிடித்துக் கொண்டிருக்கும் இரண்டு புலிகள் $3.30 மதிப்புள்ள முத்திரையில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் மற்றைய கையில் சரமாகத் தொடுக்கப்பட்ட ஆரஞ்சுப் பழங்கள் உள்ளன.
“சீனப் புத்தாண்டின் போது ஆரஞ்சுப் பழங்கள் மிகவும் பிரபலமானவை” என்று கூறும் Chrissy Lau, “அவை செல்வத்தின் சின்னமாக பார்க்கப்படுகின்றன” என்கிறார்.
சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாரம்பரியமாக இளஞ்சிவப்பு பயன்படுத்தப் படுவதில்லை. அதனைப் பயன்படுத்துவதற்கு அவர் எடுத்த முடிவு “ஓரளவு ஆபத்தான முடிவு” என்று கூறுகிறார் Chrissy Lau.
“சந்திர புத்தாண்டு பிறந்த சில நாட்களில் காதலர் தினம் கொண்டாடப் படுவதால், காதலைப் பிரதிநிதித்துவப்படுத்த இளஞ்சிவப்பு நிறத்தை இணைப்பது என்று அவர் முடிவெடுத்ததாகக் கூறுகிறார்.
சீன புத்தாண்டை நினைவு கூரும் அஞ்சல் முத்திரைகளை வடிவமைக்க, ஆஸ்திரேலிய அஞ்சல் துறை இரண்டாவது தடவையாக விருது பெற்ற சீன-ஆஸ்திரேலிய கலைஞர் ஒருவரை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Year of the Tiger 2022 stamps Source: Australia Post

The front graphic of the SBS Lunar New Year 2022 Tiger installation by Chris Yee. Source: SBS
உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இந்த வருட புத்தாண்டு மற்றொரு சவாலான புத்தாண்டாக இருக்கலாம், எனவே அவர்களை மீண்டும் முத்திரை சேகரிப்பில் ஈடுபட வைக்க இந்த முத்திரைகள் உதவக்கூடும் என்று Chrissy Lau நம்புகிறார்.
“Covid-19 காரணமாக கடந்த இரண்டு வருடங்களும் அனைவருக்கும் கடினமானவையாக இருந்தன. எனவே இந்த முத்திரைகள் அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சியைத் தொற்றுவிக்கும் என்ற நம்பிக்கையுடன் இவற்றை வடிவமைத்தேன்” என்று Chrissy Lau மேலும் கூறினார்.
இந்த முத்திரைகள் ஜனவரி மாதம் 6ஆம் தேதி வெளியிடப்பட்டன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.