நைஜீரிய நாட்டினர் ஆஸ்திரேலிய விசா பெறுவதற்கு இலஞ்சம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தென்னாபிரிக்காவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தின் இரண்டு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் தெரியவந்துள்ளது.
குறைந்தபட்சம் 21 நைஜீரியர்கள் ஆஸ்திரேலிய மாணவர் விசாக்களை முறைகேடாகப் பெற்றுள்ளனர் என்று The Herald Sun செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணையிலேயே தூதரக அதிகாரிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தெரியவந்து அக்குறிப்பிட்ட உத்தியோகத்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரியும் ஆஸ்திரேலிய பிரஜைகளற்ற இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக Department for Home Affairs உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட அவ்விரு பணியாளர்களும் நைஜீரியர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு எவ்வித சோதனை நடைமுறைகளையும் பின்பற்றாமல் அவர்களுக்கு ஆஸ்திரேலிய விசாக்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விசாக்கள் கடந்த வருட மாசி தொடக்கம் சித்திரை வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்டதாக Administrative Appeals Tribunal ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.