லண்டனுக்கு செல்லும் ஆஸ்திரேலியர்கள் இனிமேல் விமானநிலைய அதிகாரிகளிடம் தங்களின் கடவுச்சீட்டுக்களை காண்பிப்பதற்கு நீண்ட நேரம் வரிசையில் நின்றுகொண்டிராமல் தானியங்கி கடவுச்சீட்டுச்சோதனை கடவைகளின் (e-passport gate) ஊடாக செல்லும் வகையிலான ஏற்பாடு மிகவிரைவில் அறிமுகமாகவுள்ளது.
லண்டனுக்குச்செல்கின்ற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் தற்போது நடைமுறையிலுள்ள e-passport gate வசதியை இனிமேல் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், அமெரிக்கா போன்ற தெரிவு செய்த நாடுகளுக்கும் வழங்கவுள்ளதாக பிரித்தானிய Chancellor Phillip Hammond தனது வரவு செலவுத்திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஏற்பாட்டின் பிரகாரம் தற்போது வரிசையில் நின்று கடவுச்சீட்டுக்களை காண்பிப்பதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்தை விமானநிலைய வரிசைகளில் செலவிடும் பயணிகள் பயன்பெறுவர் என்று ஆஸ்திரேலியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நாடுகளுக்கான இந்த e-passport gate வசதி எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாயிலூடாக செல்லும்போது பயணிகளின் இலத்திரனியல் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை துரிதமாக சோதனை செய்து பயணிகளை வேகமாக பயணிப்பதற்கு e-passport gate அனுமதிக்கும் என்று கூறியுள்ள பிரித்தானிய அரசுத்தரப்பு, e-passport gate நடைமுறையானது தங்களது எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்கமாக கடைப்பிடிப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.