மெல்பனின் தென்கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுப் பெண் ஒருவர் ambulance-க்காக சுமார் 6 மணிநேரங்கள் காத்திருந்தநிலையில் மரணமடைந்துள்ளார்.
Caulfield North-ஐச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு கடந்த புதன்கிழமை இரவு numbness, tingling, light headed போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து அவர் உடனடியாக 000 ஐ அழைத்து ambulance-ஐ அனுப்பிவைக்குமாறு கோரியிருக்கிறார்.
குறித்த பெண்ணின் மருத்துவ அவசர நிலைமை code 2 அல்லது code 3 என்ற பிரிவுக்குள் வருவதால், அவருக்கான ambulance 25 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்களுக்குள் அனுப்பிவைக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், ஆனால் தவிர்க்கமுடியாத பல்வேறு காரணங்களால் ambulance-ஐ உரிய நேரத்திற்குள் அனுப்பிவைக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து சுமார் ஆறரை மணிநேரங்களின் பின் குறித்த பெண்ணின் வீட்டுக்கு அவசரசேவைப்பிரிவினர் சென்றபோது அப்பெண் உயிரற்ற நிலையில் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விக்டோரிய சுகாதார அமைச்சர் Martin Foley உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை விக்டோரிய மாநிலத்தில் ambulance வண்டிகளை உரிய நேரத்தில் தேவையான இடங்களுக்கு அனுப்பிவைப்பது மிகச் சவாலான ஒன்றாக தொடர்ந்தும் காணப்படுவதாகவும், மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப்பிரிவுகளின் அதிகரித்த வேலைப்பளு மற்றும் பணியாளர் பற்றாக்குறை உட்பட பல காரணிகள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் Ambulance Union செயலாளர் Danny Hill தெரிவித்துள்ளார்.
Ambulance பிரிவு மட்டுமல்லாமல் விக்டோரியாவின் சுகாதார கட்டமைப்பே நெருக்கடி நிலையில் இருப்பதாகவும், இதை நிவர்த்திசெய்ய மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் மாநில எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.