வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசிகளை பயன்படுத்தும் ஓட்டுநர்களை பிடிப்பதற்கென NSW மாநிலத்தின் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் மூலம் கடந்த மார்ச் - ஜுன் வரையான காலப்பகுதியில் 43 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசுக்கு சுமார் 19 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக Revenue NSW புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ள பல ஓட்டுநர்கள், சட்டத்திலுள்ள ஓட்டையினைப் பயன்படுத்தி demerit புள்ளி இழப்பிலிருந்து தப்பித்துவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது NSW மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசியை பயன்படுத்தும் ஓட்டுநர்கள் 349 டொலர்கள் அபராதமும் 5 demerit புள்ளிகளும் தண்டனையாக பெறுவர்.
ஆனால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்ட ஓட்டுநர்களில் பலர், வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், கமராவில் பதிவான வாகனத்தை ஓட்டிச் சென்றவர் யார் என்பதைத் தம்மால் அடையாளம் காணமுடியவில்லை என இந்நிறுவனங்கள் தெரிவித்துவிடுவதால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் demerit புள்ளி இழப்பிலிருந்து தப்பித்துவிடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதிலுக்கு குறித்த வாகனம் யாருக்குச் சொந்தமானதோ அந்த நிறுவனம் அபராதத்தொகையை ஐந்து மடங்காக($1745) செலுத்துமாறு பணிக்கப்படும்.
இப்படியாக கடந்த மார்ச் - ஜுன் மாதம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டவர்களில் 8 வீதமானவர்கள் demerit புள்ளி இழப்பிலிருந்து தப்பித்துவிட்டதாகவும், இதற்குப் பதிலாக இவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனங்களிடமிருந்து 6 மில்லியன் டொலர்கள் வசூலிக்கப்பட்டதாகவும் NSW மாநில எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலைமையைச் சரிசெய்ய முற்படாத NSW அரசு, இதன் மூலம் பாரியளவிலான இலாபத்தைச் சம்பாதிக்கும் அதேநேரம் ஆபத்தான வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்தும் நியூ சவுத் வேல்ஸ் வீதிகளில் சுதந்திரமாக சென்றுவருகிறார்கள் என மாநில எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.