உலகளவில், பல மொழிகளில் ஒலிபரப்பும் வானொலி நிலையங்களின் சரியான எண்ணிக்கையைக் கண்டுபிடிப்பது கடினமான விடயம். ஏராளமான வானொலி நிலையங்கள் மற்றும் ஒலிபரப்புத் துறை தற்போது சமூக ஊடகங்களின் கைகளில் இருக்கும்போது இது மிகவும் சவாலான தேடல். இருப்பினும், பல வானொலி நிலையங்கள், குறிப்பாகப் பன் மொழி பேசும் மக்களைக் கொண்ட நாடுகளில் அந்தந்த அரசுகள் தமது வானொலி ஒலிபரப்பை பல மொழிகளில் செய்வதற்குத் தேவை இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தென்னாபிரிக்கா, நைஜீரியா, இந்தியா, பப்புவா நியூ கினி, மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பல மொழிகளைப் பேசும் உள்ளூர் மக்களைக் கொண்ட நாடுகளில், பல பிராந்திய மற்றும் உள்ளூர் வானொலி நிலையங்கள் பல மொழிகளில் ஒலிபரப்பு செய்கின்றன, அவற்றின் பல்வேறு மக்களுக்கு அவை சேவை செய்கின்றன.
தென்னாபிரிக்காவின் SABC வானொலி, நாட்டின் 11 அதிகார பூர்வ மொழிகளிலும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது. நைஜீரியாவின் ஃபெடரல் ரேடியோ கார்ப்பரேஷன் ஆங்கிலம், ஹவுசா, யோருபா, இக்போ மற்றும் பிற உள்ளூர் மொழிகளில் ஒலிபரப்பு செய்கிறது. அகில இந்திய வானொலி, இந்தியாவின் பல மொழிகள் பேசும் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் இந்தி, ஆங்கிலம் மற்றும் பல்வேறு பிராந்திய மொழிகள் உட்பட பல மொழிகளில் ஒலிபரப்புகள் செய்கிறது. சுவிட்சர்லாந்தின் அரச ஒலிபரப்பு ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலியன் மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்குகிறது, இது நாட்டின் அந் நாட்டின் பன் மொழிக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.
இதே வேளை, சில அரச வானொலிகள், தமது கொள்கைகளைப் பரப்பும் நோக்குடன் பல மொழிகளில் ஒலிபரப்பு செய்வதும் உண்டு.
சீன ரேடியோ இன்டர்நேஷனல் (CRI) உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு, தமிழ் உட்பட ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபு மற்றும் ரஷ்யன் என்று அறுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஒலிபரப்பு செய்கிறது. பசிஃபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு ரேடியோ ஆஸ்திரேலியாவும் ஆங்கிலம், Tok Pisin, மற்றும் ஃப்ரெஞ்சு மொழிகளில் ஒலிபரப்பு செய்கிறது. இதே போல், அமெரிக்காவின் மூன்று வானொலிகள் - வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA) ஆங்கிலம், அரபு, சீனம், பாரசீகம் மற்றும் ரஷ்யன் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஒலிபரப்பு செய்கிறது. 1954 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை தமிழிலும் ஒலிபரப்பு செய்தது; ரேடியோ லிபர்ட்டி (RFE/RL) கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இலக்காகக் கொண்டு 25க்கும் மேற்பட்ட மொழிகளிலும்; ரேடியோ ஃப்ரீ ஆசியா மாண்டரின், கான்டோனீஸ், வியட்நாமிய மற்றும் கொரிய போன்ற ஆசிய மொழிகளில் ஒலிபரப்பு செய்கிறது. இவற்றை அரசுகளின் கொள்கைகளை விளக்கும் அல்லது பிரச்சாரம் செய்யும் வானொலிகள் என்று கூறலாம்.
கலாச்சாரத்தால் அல்லது மதத்தால் அடையாளப்படுத்தப்படும் மக்களை ஒருங்கிணைக்கவும் சில வானொலிகள் பல மொழிகளில் ஒலிபரப்பு செய்கின்றன.
ஸ்பானிஷ் மொழி பேசும் சமூகங்கள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு ஸ்பானிஷ், ஆங்கிலம், பிரஞ்சு, அரபு மற்றும் பிற மொழிகளில் ரேடியோ எக்ஸ்டீரியர் டி எஸ்பானா (REE); மற்றும் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு பிரஞ்சு மற்றும் ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசம் மற்றும் அரபு உள்ளிட்ட பல மொழிகளில் ரேடியோ ஃப்ரான்ஸ் இன்டர்நேஷனல் (RFI) என்பன ஒலிபரப்பு செய்கின்றன. உலகளாவிய கத்தோலிக்க மதத்தவர்களுக்கு சேவை செய்யும் வகையில், தமிழ் மொழி உட்பட இலத்தீன், இத்தாலியன், ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் அரபு உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வானொலி வத்திக்கான் ஒலிபரப்புகளை செய்கிறது.

SBS Tamil Team 2014
வெவ்வேறு காரணங்களுக்காகத் தொடங்கப்பட்ட BBC உலக சேவை, ஜெர்மனியின் டொய்ச் வெல்லே (DW), ரேடியோ கனடா இன்டர்நேஷனல், ரேடியோ நெதர்லாந்து (RNW) மற்றும் ஆஸ்திரேலியாவின் SBS வானொலி ஆகியவையும் பல்வேறு மொழிகளில் ஒலிபரப்பு செய்கின்றன.
மிகவும் பிரபலமான சர்வதேச ஒலிபரப்புகளில் ஒன்றான BBC உலக சேவை, ஆங்கிலம், அரபு, சீனம், பிரஞ்சு, இந்தி, மற்றும் ஸ்பானிஷ் உட்பட நாற்பத்திரண்டு மொழிகளில் ஒலிபரப்புகிறது. ஜெர்மன், ஆங்கிலம், ஸ்பானிஷ், அரபு மற்றும் இந்தி உட்பட முப்பத்திரண்டு மொழிகளில் டொய்ச் வெல்லே நிகழ்ச்சிகளை வழங்குகிறது. அதன் சிற்றலை ஒலிபரப்புகள் நிறுத்தப்பட்டாலும், ரேடியோ கனடா இன்டர்நேஷனல் ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் சீனம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் தொடர்ந்து ஒலிபரப்பு செய்கிறது. அதே போல, அதன் செயற்பாடுகளைக் குறைத்து விட்டாலும் ரேடியோ நெதர்லாந்து வரலாற்று ரீதியாக டச்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் அரபு உள்ளிட்ட பல மொழிகளில் ஒலிபரப்பு செய்கிறது.
இவற்றிலிருந்து சற்று வேறுபட்டு நிற்கிறது, இந்த வருடம் ஐம்பது வயதை எட்டும் ஆஸ்திரேலியாவின் SBS வானொலி.
ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சார மக்களை பிரதிபலிக்கும் வகையில் அறுபத்தெட்டு மொழிகளில் SBS வானொலி நிகழ்ச்சிகளை வழங்குகிறது. அது கடந்து வந்த பாதையை, பதித்த சுவடுகளைத் திரும்பிப் பார்த்தால் அதன் ஆரம்பம் அதனை இவ்வளவு தூரத்திற்கு எடுத்து வந்திருக்கும் என்பதை அதனை உருவாக்கியவர்கள்கூட கற்பனை செய்து பார்த்திருக்கமாட்டார்கள்.

1975ம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு தேவை ஏற்பட்டது. மக்கள் அனைவருக்கும் (மெடிபாங்க் [medibank] என்று அப்போது அழைக்கப்பட்டு, இப்போது மெடிகேர் [medicare] என்று அழைக்கப்படும்) மருத்துவ காப்பீடு வழங்குவது என்று சட்டம் இயற்றியாயிற்று. அதனை மக்களிடம் முறையாகத் தெரிவித்து, அனைவரையும் அதில் பங்கு கொள்ளச் செய்யவேண்டும் என்று அரசு விரும்பியது. ஆனால் அனைவரையும் அதில் எப்படிப் பங்கு கொள்ள வைப்பது? இந்த செய்தியை எப்படி அனைவரிடமும் எடுத்துச் செல்வது? இப்போது உள்ளதைப் போல, சமூக ஊடகங்கள் அப்போது இருக்கவில்லை. யார் கைகளிலும் தொலைபேசி கிடையாது. அது, வீட்டில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு கருவி. புலம்பெயர்ந்து, அல்லது அகதிகளாக ஆஸ்திரேலியாவில் குடி வந்தவர்களுக்கு ஆங்கில மொழிப் புலமையும் சிறப்பாக இருந்தது என்று கூற முடியாது.
மெடிகேர் தொடர்பான செய்தியைப் பரப்புவதற்காக, சமூக வானொலி நிலையங்கள் என்று அழைக்கப்பட்ட ஒலிபரப்புகளுக்காக, 12 வார பரிசோதனைத் திட்டத்தை அரசு தொடங்கியது. மெல்பன் நகரில் 3EA என்ற பெயரிலும், சிட்னி நகரில் 2EA என்ற பெயரிலும், அரசு இரண்டு வானொலி நிலையங்களைத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஆறு மொழிகளில் மட்டுமே ஒலிபரப்பு நடத்தப்பட்டது.
கிரேக்க நிகழ்ச்சி முதலில் ஒலிபரப்பப்பட்டது - தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தபோதிலும், அது ஒரு பெரிய வெற்றியாகப் பார்க்கப் பட்டது. ஒலிபரப்பாளர்கள் தொழில்துறைப் பயிற்சி பெற்றிருக்கவில்லை. சிட்னி நகரிலிருந்து ஏழு மொழிகளிலும் மெல்பன் நகரிலிருந்து எட்டு மொழிகளிலும் ஒலிபரப்பு சேவைகள் தொடர்ந்தன. பன்னிரண்டு வார பரீட்சார்த்த காலம் முடிந்த பின்னர், இந்த சேவை பிரபலமானதாக இருந்தமையால் அரசு அதனைத் தொடர்வது என்று முடிவெடுத்தது. ஆட்சி மாறியிருந்தாலும், ஆட்சிப் பொறுப்பேற்ற மற்றைய கட்சியும் இந்த வானொலி ஒலிபரப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதென்று முடிவெடுத்ததால், இந்த வானொலி தன் பயணத்தைத் தொடர்ந்தது.

SBS Logo - SBS Source: SBS
SBSயின் தொலைக்காட்சி சேவை 1980ஆம் ஆண்டு தொடங்கிய பின்னர், வானொலியும் தொலைக்காட்சியும் SBS எனும் ஒரே பெயரின் கீழ் இயங்க ஆரம்பித்தன.

இப்படியான மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 1992ஆம் ஆண்டு முதல், வாரத்திற்கு 45 நிமிடங்கள் என தமிழ் ஒலிபரப்பின் நேரம் அதிகரிக்கப்பட்டது. பின்னர், 1994ஆம் ஆண்டு முதல், வாரத்திற்கு ஒரு மணி நேரம் என்றும், 2013ஆம் ஆண்டு முதல், வாரத்திற்கு நான்கு மணி நேரம் என்றும் படிப்படியாக, தமிழ் ஒலிபரப்பின் நேரம் அதிகரித்தது.
SBS வானொலியின் தொடக்க காலத்தில் புலம்பெயர்ந்து நாட்டில் குடிவந்த மக்களுக்கு, அவரவர் பிறந்த நாட்டின் நடப்புகளையும் செய்திகளையும் எடுத்து வருவதே முக்கிய நோக்கமாக இருந்தது. இப்போது உள்ளதைப் போல சமூக ஊடகங்கள் அப்போது இருக்கவில்லை, தொலைபேசி வசதிகளும் பெரும் பொருட் செலவை ஏற்படுத்தின. மட்டுமன்றி, கப்பல் வழியாகவோ, வான் வழியாகவோ அந்தந்த நாடுகளிலிருந்து செய்தித் தாள்கள் ஆஸ்திரேலியாவை வந்தடைய சில சமயங்களில் ஒரு வாரம் கூட எடுக்கலாம். அப்படியான கால கட்டத்தில், “சுடச் சுட” செய்திகளைக் கேட்பதற்கு, குடி வந்தவர்கள் இந்த வானொலியை நம்பியிருந்தார்கள்.
இன்று நிலமை மாறிவிட்டது. உலகின் எந்தப் பகுதியில் என்ன நடந்தாலும் அந்த செய்தி அனைவருக்கும் உடனுக்குடன் சென்று சேர்ந்து விடுகிறது. எனவே, SBS ஒலிபரப்பும் தனது முக்கிய நோக்கத்தை மாற்றியுள்ளது. குடி வந்தவர்கள் நாட்டு செய்திகளில் அதிக கவனம் செலுத்தாமல், ஆஸ்திரேலிய செய்திகளை குடி வந்தவர்கள் மொழிகளில் எடுத்துச் செல்வதே அதன் பிரதான நோக்கமாக செயல்படுகிறது.
ஒரு மணி நேர நிகழ்ச்சி என்றால், அதன் முதல் பாதியில், “நேயர்கள் தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள் (what the audience need to know)” என்றும், அதன் இறுதி பாதியில் “நேயர்கள் தெரிந்து கொள்ள விரும்பும் விடயங்கள் (what the audience want to know)” என்றும் வகுத்து ஒலிபரப்பு சேவைகளை வழங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களுக்கு, SBS ஒரு ஊடக நிறுவனமாக மட்டும் இயங்காமல் அந்த சமூகத்துடன் இணைந்து அவர்களின் பண்பாட்டு வேர்களுடன் அவர்களை இணைக்கும் ஒரு பாலமாகவும், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கும் ஒரு கருவியாகவும் திகழ்ந்து வருகிறது.

தமிழ் சமூகத்திற்கு, நம்பகமான செய்தி வழங்கும் ஊடகமாக SBS தமிழ் திகழ்கிறது. உள்நாட்டு, தேசிய மற்றும் சர்வதேச செய்திகள், அரச கொள்கைகள், சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை வழங்கி, ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களுக்கு SBS ஒரு வழிகாட்டியாக நடக்கிறது.
தற்போதைய சமூகப் பிரச்சினைகளான மன ஆரோக்கியம், தலைமுறை முரண்பாடுகள் மற்றும் பண்பாட்டு அடையாளம் போன்றவற்றை மையமாகக் கொண்டு, இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் வகையில் SBS நிகழ்ச்சிகளைத் தயாரிக்கிறது.
தமிழ் ஆஸ்திரேலியர்கள் தங்கள் பண்பாட்டு வேர்களுடன் இணைந்து, புதிய சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.
தமிழ் சமூகத்திற்கும் பரந்த ஆஸ்திரேலிய சமூகத்திற்கும் இடையே ஒரு பாலமாக SBS திகழ்கிறது. தமிழ் பண்பாடு மற்றும் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தி, பிற ஆஸ்திரேலியர்களிடையே புரிதலை ஏற்படுத்த உதவி வருகிறது.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று தம்மைத் தாமே போற்றும் தமிழினம், விஞ்ஞான அடிப்படையில் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் வாழும் பூர்வீகக் குடி மக்களுடன் உள்ள தொடர்புகள், கதைகள், வரலாற்றுப் பாடங்களையும் SBS எடுத்து வருகிறது.

உலகில், மிகவும் அதிகமான மொழிகளில் SBS தொடர்ந்தும் வானொலி ஒலிபரப்பு சேவை வழங்கி வருகிறது.
SBS அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கும் போது, தமிழ் சமூகத்தின் மாறும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் SBS தமிழ் ஒலிபரப்பும் அதன் சேவைகளும் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் ஊடகங்களின் வளர்ச்சியுடன், SBS தனது இணைய வழி பகிர்தலையும் விரிவுபடுத்தி, இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் புதிய உள்ளடக்கங்களையும் வழங்குகிறது.
முன்னர், வானொலி ஒலிபரப்பு என்றால் அந்த ஒலிபரப்பு நடக்கும் நேரத்தில் மட்டும், அதுவும் வானொலியில் மட்டுமே அதனைக் கேட்க முடியும். நாம் விரும்பும் நேரத்தில் கேட்க முடியாது. ஆனால், இப்பொழுது, நாம் விரும்பும் நேரத்தில், நாம் விரும்பும் கருவியில் ஒலிபரப்பை முழுவதுமோ அல்லது எமக்குப் பிடித்த பகுதிகளை மட்டுமோ கேட்க முடியும். SBS ஒலிபரப்பும் அதற்கு விதி விலக்கல்ல. இணையம், வானொலி, சமூக ஊடகம் என்று பல வழிகளில் கேட்கலாம்.
ஐம்பது வருடங்களாக ஒலிபரப்பில் ஈடுபட்டிருக்கும் SBS வானொலியில், தமிழ் ஒலிபரப்பு இன்னும் மூன்று வருடங்களில் ஐம்பதைத் தாண்டும்.
SBS தமிழ்: நீங்களும் தொடர்ந்து கேளுங்கள்; பிற ஆஸ்திரேலிய தமிழருக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand