ஆஸ்திரேலியாவிலிருந்து நியூஸிலாந்துக்கு பயணிக்கும் ஆஸ்திரேலியாவின் நிரந்தர வதிவிட உரிமை உடையவர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் புதிய ஒழுங்கொன்றினை நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள் (Australian permanent residents) இவ்வளவு காலமும் நியூஸிலாந்துக்கு சென்று அங்கு அந்த நாட்டுக்குள் நுழைவதற்கான விசாவை பெற்றுக்கொள்ளும் ஒழுங்கு (on arrival visa) நடைமுறையிலிருந்தது. ஆனால், இனிமேல் - ஆஸ்திரேலிய குடியுரிமை உள்ளவர்கள் (Australian citizens) மாத்திரமே அவ்வாறு நியூஸிலாந்து விமானநிலையத்தில் அந்நாட்டு குடிவரவு அதிகரிகளிடம் விசா பெற்றுக்கொண்டு நாட்டுக்குள் செல்லலாம்.
ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை உடையவர்கள், நியூஸிலாந்து போகும்முன்னரே இணையம் வழியாக இலத்திரனியல் விசாவுக்கு (e visa) விண்ணப்பித்து அந்த விசா பிரதியுடனேயே அங்கு செல்லவேண்டும்.
இந்த இலத்திரனியல் விசாவை இணையம் வழியாக விண்ணப்பிப்பதற்கு 12 நியூஸிலாந்து டொலர்கள் செலவாகும். கைத்தொலைபேசியில் விசா செயலியை தரவிறக்கம் செய்து அதன் ஊடாக விண்ணப்பித்தால் 9 நியூஸிலாந்து டொலர்கள் மாத்திரமே.
இந்த புதிய மாற்றம் ஆஸ்திரேலியா உட்பட 60 நாடுகளுக்கு புதிதாக அறிமுகப்படுத்துவதாகவும் இனிமேல் இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது குற்றப்பின்னணி தொடர்பில் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு முன்னரே அறிவிக்கவேண்டும் என்றும் நியூஸிலாந்து குடிவரவு அமைச்சு கோரியுள்ளது.