Wattamolla அருவிக்குள் பாறையிலிருந்து குதித்து நீந்துவதற்கு முயற்சி செய்தார் என்று கருதப்படும் நேபாளத்தை சேர்ந்த 23 வயது மாணவர் நீருக்கு அடியில் இழுத்துச்செல்லப்பட்டு ஏழு அடி ஆழத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சிட்னியின் தெற்குப் பகுதியில் கடந்த திங்களன்று மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.
Royal National Park - Wattamolla ஏரியில் அருவியோடு அமைந்துள்ள குடாபோன்ற பகுதி நீச்சலுக்கு தடைசெய்யப்பட்டதாகும். அதற்கான அறிவிப்பு அங்கு வைக்கப்பட்டு சுற்றுவேலியும் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், குறிப்பிட்ட நேபாள மாணவன் தனது நண்பியுடன் வேலியைத்தாண்டி குதித்து அருவிக்குள் குளிப்பதற்கு முயற்சித்திருக்கிறார். இவருக்கு நீச்சல் தெரியாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
திடீரென்று நீருக்கு அடியில் குறிப்பிட்ட மாணவர் இழுத்துச்செல்லப்பட்டதையடுத்து, அவசர சேவைப்பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. விரைந்துவந்த மீட்புப்பிரிவினர், சுமார் 20 நிமிடங்களின் பின்னர், நீருக்கு அடியில் ஏழு அடி ஆழத்திலிருந்து மாணவனின் சடலத்தை மீட்டுள்ளார்கள்.
இவருடன் குடாவுக்குள் பாய்ந்த பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த ஆபத்துமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் ஆபத்தான நீர்ப்பரப்பாக கருதப்படும் Wattamolla Lagoon பிரதேசத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்று ஐந்து மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.