ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் வந்த 30 புகலிடக்கோரிக்கையாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் தமது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக Operation Sovereign Borders என்ற ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலான மாதாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 30 பேரில்- ஜனவரி மாதம் 1ம் திகதி 2014ம் ஆண்டுக்கு முன்னர் வந்த 22 பேர் திருப்பியனுப்பப்படுவதற்கு சம்மதித்திருந்ததாகவும்- ஏனைய 8 பேர் பலவந்தமாக அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 01 - 30 வரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் வாழ்ந்த எவரும் தமது சுயவிருப்பின் பேரில் தாய்நாட்டிற்கு திருப்பியனுப்பப்படவில்லை என்றும் இச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2017 நவம்பரில் இந்தோனேசியாவிலிருந்து 6 பங்களாதேஷ் புகலிடக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அழைத்துவரமுற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 3 பேருக்கு கடந்த மாதம் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட Arif, Mohammad Nur Hossain, Herry Firdaus ஆகிய மூவருக்கும் 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 1 பில்லியன் இந்தோனேசிய ரூபாய்கள் அபராதமும் (அல்லது அதற்குப் பதிலாக மேலுமொரு மாதகால சிறை) விதிக்கப்பட்டுள்ளது.