கிறிஸ்மஸ் பரிசாக இதயம், கல்லீரல், நுரையீரல் பெற்றுக்கொண்ட பிரிஸ்பன் நபர்!!

ABC

Source: ABC Australia

பிறிஸ்பனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தைக்கு கிறிஸ்மஸ் பரிசாக இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவை கிடைத்ததையடுத்து அவர் இரண்டாவது ஆயுளைப்பெற்றிருக்கிறார். இந்த அதிசய நிகழ்வை சுமார் பத்து மணி நேர சத்திரசிகிச்சையின் மூலம் 15 வைத்தியர்கள் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.

பிறிஸ்பனை சேர்ந்த Joshua Leveridge என்பவர் cystic fibrosis என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை மாற்றவேண்டியவராக இருந்திருக்கிறார். ஆனால், யாராவது உறுப்பு தானம் செய்தால் மாத்திரமே இவருக்குரிய குறிப்பிட்ட சிகிச்சை மேற்கொண்டு புதிய உறுப்புக்களை மாற்றமுடியும் என்ற நிலை காணப்பட்டது. மூன்று உறுப்புக்களையும் ஒரே தடவையில் மாற்றவேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தினால் Joshua Leveridge கடந்த இரண்டு வருடங்களாக தனது பெயரை பதிவுசெய்துவிட்டு காத்திருந்திருக்கிறார்.

மூன்று உறுப்புக்களும் ஒரே தடவையில் கிடைப்பதென்பது கிட்டத்தட்ட வாய்ப்பேயில்லை என்ற நிலை காணப்பட்டதால், Joshua Leveridge மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை இழக்கத்தொடங்கினார்கள்.

இந்தநிலையில், ஒருநாள் திடீரென்று வந்த வைத்தியசாலை அழைப்பில் உறுப்புக்கள் கிடைத்திருப்பதால் சத்திரசிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்பிரகாரம் அண்மையில் நடைபெற்று முடிந்த விசேட உறுப்பு மாற்று சிகிச்சையினால் Joshua Leveridge இரண்டாவது ஆயுளைப்பெற்றுக்கொண்டார். இது தனக்கு கிடைத்த மறக்கமுடியாத கிறிஸ்மஸ் பரிசு என்று அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட  எட்டாவது நபர் Joshua Leveridge என  மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.


Share
Published 26 December 2019 3:53pm
Updated 26 December 2019 4:14pm

Share this with family and friends