ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி சீனா மற்றும் தென் கொரியாவிற்கு அடுத்ததாக இந்தியாவில் இருந்து வந்த மாணவர்களின் வீசா அதிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1100 இந்திய மாணவர்கள் தங்களின் வீசாவை இழந்துள்ளனர். இவர்களின் வீசா பல காரணங்களினால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்பதற்காக மாணவர் வீசாவில் வந்த பிறகு ஆறு மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட course ஒன்றில் சேராததால் இந்திய மாணவரான Lovepreet Singh தனது மாணவர் வீசாவை இழந்துள்ளார். இவரை போன்று 18,000 சர்வதேச மாணவர்களின் வீசாவை கடந்த நிதியாண்டில் குடிவரவு திணைக்களம் ரத்து செய்துள்ளது
ஆஸ்திரேலியாவிற்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவன் ஒரு வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி உண்டு. ஆனால் தங்களின் வாழ்க்கை மற்றும் கல்வி செலவுகளுக்காக பலர் 20 மணி நேரத்திற்கு அதிகமாக வேலை செய்கின்றனர். இது அவர்களின் வீசா விதிமுறை மீறலாகும். இதனால் பலர் தங்களின் வீசாவை இழக்கின்றனர்.
சர்வதேச மாணவர்கள் தங்களின் சூழ்நிலையில் மாற்றம் நிகழ்ந்தால் அம்மாற்றத்தை 14 நாட்களுக்குள் திணைக்களத்திடம் தெரிவிக்க வேண்டும். தெரிவிக்காமல் விட்டால் அது அவர்களின் வீசாவை பாதிக்கும். அதேபோன்று சர்வதேச மாணவர்கள் சரியான courseல் சேரவில்லை என்றாலும் போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அது கண்டுபிடிக்கப்படும் போதும் அவர்களின் வீசா ரத்து செய்யப்படும்.
2019ஆம் ஆண்டு இவ்வாறு ரத்து செய்யப்பட்ட மாணவர் வீசா அதிகம் என்றாலும் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என்றும் வீசாவில் உள்ள விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படும் போது மாணவர் வீசா ரத்தாவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள் குடிவரவு முகவர்கள். ஆஸ்திரேலியாவிற்கு கடந்த ஆண்டு கல்வி கற்க வந்த ஒரு லட்சம் இந்திய மாணவர்களில் 1157 மாணவர்களின் வீசாவே ரத்து செய்யப்பட்டன என்பது ஆபத்தான எண்ணிக்கை அல்ல என்றும் கூறப்படுகிறது.
Source : SBS Punjabi