நகரங்களில் அதிகரித்துவரும் நெரிசலைத் தடுக்கும் முயற்சியாக, அரசு நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதைக் குறைத்துக் கொண்டு வந்துள்ளது. தற்போது, நிரந்தரமாகக் குடிவருபவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகக் குறைந்துள்ளது.
2018 - 19 ஆம் ஆண்டில் 160,300 ற்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர வதிவிட வீசா வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய வருடம் வழங்கப்பட்ட நிரந்தர வதிவிட வீசா எண்ணிக்கையை (162,417) விட சற்று குறைந்துள்ளது.
இந்தக் காலப் பகுதியில் 190,000 பேருக்கு நிரந்தர வதிவிட வீசா வழங்க இடமிருந்தாலும், விண்ணப்பங்களைப் பரிசீலிக்க அளவுக்கதிகமான நேரம் எடுப்பதால் தான், 30,000 பேருக்கு அந்த வீசா வழங்கப்படவில்லை என்று குடிவரவு முகவர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
வழங்கப்பட்ட நிரந்தர வதிவிட வீசாக்களில் மிகப் பெரும்பான்மையானவை (70 சதவீதம்) திறமை அடிப்படையில் வந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
சுமார் 51,000 குடும்ப மற்றும் குழந்தைகளுக்கான வீசாக்களும் வழங்கப்பட்டன. ஆனால், ஏப்ரல் மாத முடிவில் விண்ணப்ப மதிப்பீட்டிற்காக காத்திருந்த பெற்றோர் மற்றும் குடும்ப வீசா விண்ணப்பதாரரின் எண்ணிக்கையை விட, இந்தத் தொகை குறைவானதாகும்.
இந்தத் தரவுகளை, நேற்று Warrnambool dairy farm என்ற பண்ணையில் குடிவரவு அமைச்சர் டேவிட் கோல்மன் (David Coleman) வெளியிட்டு வைத்த போது, பிராந்திய குடிவரவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீசாக்கள் 44 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.
“மக்கள்தொகை குறித்த எங்கள் திட்டம், பெரிய தலைநகரங்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். அதே நேரத்தில், மக்களை வரவேற்கும் சிறிய நகரங்கள் மற்றும் பிராந்தியங்களின் வளர்ச்சியை ஆதரிக்கும்” என்று டேவிட் கோல்மன் மேலும் கூறினார்.

Source: Facebook
தலைநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், அதிகரித்து வரும் வீட்டின் விலைகள் குறித்த கவலைகளைத் தீர்க்கவும், ஆஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாகக் குடிவருவோரின் எண்ணிக்கையை 160,000 ஆக மட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு, இந்த நிதியாண்டில் நடைமுறைக்கு வருகிறது.
குடிவருவோர், தலைநகரங்களுக்கு வெளியே குடியேற ஊக்கத் தொகை வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

Regional sponsored migration, 2018-2019. Source: SBS

Source: Hikvision
“ஆஸ்திரேலியாவிற்குக் குடிவருவோர், சிறிய நகரங்களுக்கும் பிராந்தியப் பகுதிகளுக்கும் செல்வதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். பிராந்திய பொருளாதாரங்களை வளர்ப்பதற்கு இவர்கள் அவசியம். அங்குள்ள உள்ளூர் தொழிலாளர்களால் மட்டும் தேவையான வேலைகளைச் செய்ய முடியாது” என்று டேவிட் கோல்மன் கூறினார்.
நிரந்தரமாகக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த அதே நேரத்தில், திறமை அடிப்படையில் இங்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் உயரும் என்று அரசாங்கத்தின் நிதி நிலை கணிப்புகள் எதிர்பார்க்கின்றன. அந்த உயர்வை நம்பித் தான், கருவூலக்காப்பாளரும் வரவு செலவுக் கணக்கில் உபரி நிலை ஏற்படும் என்று எதிர்வு கூறியுள்ளார்.
ஆனால், ஏப்ரல் மாதம் குடிவரவு அதிகாரிகள் வெளியிட்ட சில தரவுகளின்படி, 50,000 பேர் ஏற்கனவே காத்திருப்பதால், பெற்றோர் வீசாக்களுக்காக சிலர் 56 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.