ஆஸ்திரேலியாவுக்கு partner visa மூலம் வருகை தருபவர்கள் ஆங்கிலமொழிப் புலமையை நிரூபிக்க வேண்டுமென்ற நடைமுறையை அறிமுகப்படுத்த அரசு உத்தேசித்துள்ளமை நாமறிந்த செய்தி.
இந்நிலையில் தனது மணத்துணையை ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பொன்சர் செய்பவரின் character-நடத்தையும் இனிமேல் Partner visa நடைமுறையில் தாக்கம் செலுத்தவுள்ளது.
இதன்படி வெளிநாட்டிலுள்ள தனது துணையை ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பொன்சர் செய்யும் ஒருவர்மீது குடும்ப வன்முறை, பாலியல் முறைகேடு, சிறுவர்கள் மீதான பாலியல் முறைகேடு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடையதாக ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால் அவரது sponsorship விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதில் சிக்கல்கள் எழலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்பொன்சர் செய்பவரின் sponsorship விண்ணப்பம் முதலில் தாக்கல் செய்யப்பட்டு அதற்கு அங்கீகாரம் கிடைத்தபின்னர்தான், அதாவது sponsorship approval பெற்றபின்னர்தான் partner விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்நிலையில் ஸ்பொன்சர் செய்பவரின் நடத்தை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அவர் தேவையான நிபந்தனைகளை பூர்த்திசெய்யும்பட்சத்தில் மாத்திரமே sponsorship approval வழங்கப்படும் என்பதற்கு மேலதிகமாக, குறித்த நபர்மீது குடும்பவன்முறை தொடர்பிலான பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் அல்லது criminal records இருக்கும்பட்சத்தில் அதனை ஆஸ்திரேலிய அதிகாரிகள் வெளிநாட்டிலுள்ள துணைக்கு தெரியப்படுத்த முடியும்.
இதன்மூலம் வெளிநாட்டிலுள்ள மணத்துணை ஆஸ்திரேலியாவிலுள்ள தனது துணையுடன் வந்து இணைவதா இல்லையா என்ற முடிவை எடுக்க முடியும்.
இதுகுறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகியிருந்த பின்னணியில், இது 2021 இறுதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.