ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தங்களது பிள்ளைகளை பார்ப்பதற்கு தற்காலிக விசாவில் வருகின்ற பெற்றோர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் தங்களது தொடர்பிலக்கம் உள்ளிட்ட முக்கிய விவரங்களில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னதாக குடிவரவுத்திணைக்களத்துக்கு அறிவிக்கவேண்டும் என்றும் அவ்வாறு செய்யத்தவறினால் அவர்கள் நாடுகடத்தப்படக்கூடிய ஆபத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் புதிய தற்காலிக பெற்றோர் விசா வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ள பின்னணியில், ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக தங்குவதற்கு வருகை தருகின்றவர்கள் தாங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் தொடர்புகொள்வதெற்கென தொடர்பிலக்கங்கள் உட்பட பல்வேறு தகவல்களை ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்னரே குடிவரவுத்திணைக்களத்துக்கு தெரியப்படுத்துகிறார்கள். இது விசா விண்ணப்ப படிவத்தில் கோரப்படுகின்ற முக்கிய தகவல்களில் ஒன்றாகும்.
ஆனால், இவற்றில் மாற்றங்களை செய்வதென்றால், அவை தொடர்பில் ஆகக்குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னர் குடிவரவுத்திணைக்களத்துக்கு அறிவிக்கவேண்டும் என்று குடிவரவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்படி விசாவில் வருபவர்கள் தங்களது தங்குமிட தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல், தங்குமிட முகவரி உட்பட எந்த தகவலை மாற்றினாலும் அவை தொடர்பில் ஆகக்குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே குடிவரவுத்திணைக்களத்துக்கு அறிவிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறான மாற்றங்களைச் செய்வதற்கு முன்னதாகவே குடிவரவுத்திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டுமென்பது மிகவும் கடினமான, நியாயமற்ற ஒரு நிபந்தனை என பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.