ஆஸ்திரேலியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முதல் அல்லது இரண்டாம் தலைமுறை குடியேற்றவாசிகள் என ஆஸ்திரேலிய புள்ளியியல் திணைக்களம் (ABS) செவ்வாயன்று வெளியிட்ட 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் காட்டுகின்றன.
48.2 சதவீத ஆஸ்திரேலியர்களுக்கு வெளிநாட்டில் பிறந்த பெற்றோர் இருக்கின்றனர். மேலும் 27.6 சதவீதமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடொன்றில் பிறந்தவர்கள் ஆவர்.
இதற்கிடையில், வீட்டில் ஆங்கிலம் அல்லாத வேறு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 லட்சத்தால் அதிகரித்து, மொத்தம் 5.5 மில்லியனைத் தாண்டியுள்ளது.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெளிநாட்டிலிருந்து வருகைதந்த சுற்றுலாப்பயணிகள் உட்பட 25,422,788 பேர் கணக்கிடப்பட்டனர்.
1971 மக்கள்தொகை கணக்கெடுப்பில் 12,493,001 பேர் கணக்கிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது.
2017 முதல் 2021 வரையான காலப்பகுதியில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (1,020,007) ஆஸ்திரேலியாவிற்கு வருகைதந்துள்ளனர்.

Census 2021: Auch unsere Bevölkerung ist gewachsen Source: SBS News
ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் பிறந்தவர்களே இங்கு அதிகம் உள்ளனர். சீனா மற்றும் நியூசிலாந்தைப் பின்தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த 217,963 பேர், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.
வம்சாவளியைப் பொறுத்தவரை, முதல் ஐந்து இடங்களில் தொடர்ந்தும் ஆங்கிலேயர், ஆஸ்திரேலியர், Irish, Scottish மற்றும் சீனர்கள் காணப்படுகின்றனர்.
2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நீண்ட கால நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.

The Census shows Australia has welcomed more than one million people into Australia since 2017. Source: SBS News
இதன்படி எட்டு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் நீண்டநாள் நோய்நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக 2,231,543 பேர் உளவியல் நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,150,396 பேர் தமக்கு மூட்டுவலி இருப்பதாகவும், 2,068,020 பேர் தமக்கு ஆஸ்துமா இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நீண்டநாள் நோய் நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பூர்வீக குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவு காட்டுகிறது. கடந்த 2016 முதல் இவர்களது எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

For the first time, the 2021 Census has included information on the number of people who have long-term health conditions. Source: SBS News
2021 கணக்கெடுப்பில் 812,728 பேர் (மக்கள் தொகையில் 3.2 சதவீதம்) பூர்வீக குடிமக்கள் மற்றும் அல்லது டோரஸ் ஸ்ரெயிட் தீவுவாசிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2016 இல் 31,000 ஆகவும், 2011 இல் 21,000 ஆகவும் இருந்த, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பூர்வீக குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களின் எண்ணிக்கை, 2021 இல் 47,677 ஆக அதிகரித்துள்ளது.
பூர்வகுடி மற்றும் டோரஸ் ஸ்ரெய்ட் தீவு மக்களின் குடும்பங்களில் பாரம்பரிய மொழிகளும் தொடர்ந்து முக்கிய அங்கமாக உள்ளன, 167 பூர்வீககுடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மொழிகள் 2021 இல் 78,656 மக்களிடையே வீடுகளில் பேசப்படுகின்றன.
எட்டு சதவீத சரிவைச் சந்தித்தாலும் கிறிஸ்தவ மதம் ஆஸ்திரேலியாவில் மிகவும் பொதுவான மதமாக உள்ளது. 43.9 சதவீத மக்கள் கிறிஸ்தவர்களாக தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். இது 2016ல் 52.1 சதவீதமாகவும், 2011ல் 61.1 சதவீதமாகவும் காணப்பட்டது.
அதேநேரம் 38.9 வீதத்தினர் தமக்கு மதம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்து மதம் 2.7 சதவீதமாக உயர்ந்துள்ளது, இஸ்லாம் 3.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வீட்டில் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையில் மாண்டரின் மிகவும் பொதுவான மொழியாகத் தொடர்கிறது, அதைத் தொடர்ந்து அரபு மொழி காணப்படுகிறது.

Christianity remains the most common religion in Australia according to the 2021 Census. Source: SBS News
அதேநேரம் பஞ்சாபி மொழியில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 239,000 பேர் வீட்டில் பஞ்சாபி மொழியைப் பயன்படுத்துகின்றனர். இது 2016 இல் இருந்து 80 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
தமிழ்மொழி பேசுபவர்களாக சுமார் 95,404 பேர் தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். 85,869 பேர் சிங்கள மொழி பேசுபவர்களாக தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர்.
2017 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட மூன்று வருட காலப்பகுதியில் 850,000 க்கும் அதிகமான மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளதாகவும், 2020 மற்றும் 2021இல் கோவிட்-19 பரவல் காரணமாக புதிய வரவாளர்களின் எண்ணிக்கை 165,000 ஆகக் குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 10,852,208 குடியிருப்புகளின் தரவுகள் அடங்கியுள்ளன. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் வீதம் 96.1 ஆக காணப்படுகிறது, இது 2016 இல் 95.1 சதவீதமாக இருந்தது.
ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் (1,068,268) மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளன, அதில் ஒவ்வொரு ஐந்து ஒற்றைப் பெற்றோரில் நான்கு பேர் பெண்களாக உள்ளனர்.

Source: SBS News
மேலும் 5.5 மில்லியனுக்கும் அதிகமான, தம்பதியருடனான குடும்பங்கள் கணக்கிடப்பட்டுள்ளன, அதில் 53 சதவிகிதம் குடும்பங்கள் குழந்தைகளுடன் வாழ்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.