சட்டபூர்வமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களின் விசாவை உள்துறை அமைச்சு நிராகரித்து குறிப்பிட்ட நபரை நாடுகடத்துவதற்கு முடிவெடுப்பதற்கு முன்னர் அதற்கான காரணத்தை Administrative Appeals Tribunal (AAT)அமைப்புக்கு தெரியப்படுத்தக்கோரும் புதிய திருத்தம் ஒன்று சட்டமா அதிபரிடம் முன்மொழியப்படவுள்ளது.
AAT அமைப்பின் பணிகுறித்த மீளாய்வை நடத்தும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி Ian Callinan இப்பரிந்துரையை சமர்ப்பிக்கவுள்ளார்.
தற்போதுள்ள நடைமுறைகளின் பிரகாரம், ஆஸ்திரேலியாவுக்கு சட்டபூர்வமாக வந்தவர்கள் மற்றும் சட்டவிரோதமாக வந்தவர்களாக கருதப்படும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆகியோர் தங்களது வதிவிட உரிமைக்கான விண்ணப்பங்களை உள்துறை அமைச்சுக்கு சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சினால் கோரப்பட்டு, அதற்கும் அவர்கள் மறுத்து நாடுகடத்தப்படும் நிலையில், கடைசி முயற்சியாக AAT அமைப்பிடம் அவர்கள் தங்களது நிலைகுறித்து மேன்முறையீடு செய்யலாம்.
AAT அமைப்பிடம் இவ்வாறு முறையிடுவர்களின் விண்ணப்பங்கள் தற்போது நிரம்பி வழிகின்றன. இவை அனைத்தையும் தீர விசாரித்து சரியான முடிவை வழங்குவதற்கு AAT அமைப்புக்கு பல காலமாகலாம்.
இந்தநிலையில் விசா நிராகரிக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக தமது பரிசீலனைகளை மேற்கொண்டுவரும் AAT அமைப்பின் பணிகுறித்த மீளாய்வை நடத்திய முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி Ian Callinan, AAT அமைப்புக்கு இந்தவருடம் வந்திருக்கும் விண்ணப்பங்கள் கடந்த வருடத்தைவிட 43 வீதம் அதிகம் என்று கூறியுள்ளார்.
ஆகவே, AAT-யின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில், உள்துறை அமைச்சு குடிவரவாளர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து அவர்களை நாடுகடத்துவதற்கான முடிவை மேற்கொள்வதற்கு முன்னர், AAT அமைப்புடன் பேசி அந்த தீர்மானத்தை மேற்கொள்ளக்கோரும் திருத்தம் தொடர்பாக முன்னாள் நீதிபதி Ian Callinan சட்டமா அதிபருக்கு ஆலோசனை சமர்ப்பிக்கவுள்ளார்.