விசா தொடர்பிலான அரசின் புதிய சட்டம் நாடாளுமன்றால் தோற்கடிப்பு!

Peter Dutton citizenship

Source: AAP

ஆஸ்திரேலிய விசா ஒன்றுக்கு விண்ணப்பிக்கும் போது, தவறான தகவல்களை வழங்குபவர்கள், சுமார் 10 வருடங்களுக்கு விசா விண்ணப்பம் தாக்கல் செய்ய முடியாதவாறு தடை செய்யும் அரசின் தீர்மானம், நாடாளுமன்ற செனற் அவையால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்திய புதிய சட்ட மாற்றத்தின் கீழ், ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ தனது விசா விண்ணப்பம் தொடர்பில் தவறான தகவல்கள், பொய்யான ஆவணங்கள் போன்றவற்றை சமர்ப்பித்தால், அவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.

இதுவரை காலமும் 12 மாதங்களாக இருந்த தண்டனைக் காலப்பகுதி, இப்புதிய மாற்றத்தின்கீழ் 10 ஆண்டுகளாக்கப்பட்டது.

மாணவர் விசா, பெற்றோர் விசா, வேலை விசா என சகல விதமான விசா விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் பல்கலாச்சார பின்னணி கொண்டவர்களை இம்மாற்றம் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் இதை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை தாம் செனற் அவையில் மேற்கொள்ளவிருப்பதாக கிரீன்ஸ் கட்சி தெரிவித்திருந்தநிலையில், நேற்றைய தினம் செனற் அவையில் disallowance motion ஊடாக லேபர் கட்சியின் ஆதரவுடன் 31-29 என்ற வாக்கு வித்தியாசத்தில் அரசின் தீர்மானம் தோற்கடிக்கபட்டது.

இதேவேளை குடிவரவு சட்டங்கள் இறுக்கமாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை உணராத லேபர் மற்றும் கிரீன்ஸ் கட்சியினரின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாகவும், இதனால் பாரிய பின்விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.



 

Share
Published 6 December 2017 1:57pm
Presented by Renuka

Share this with family and friends