Character test-நன்னடத்தை சோதனையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாவை நிராகரித்து அவர்களை நாடுகடத்துவதற்கு ஏதுவான சட்டத்தை Morrison அரசு வெகுவிரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஸ்திரேலிய குடியுரிமை இல்லாதவர்கள், பாரதூரமான குற்றங்களில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டாலோ குறைந்தது இரண்டு வருட சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டாலோ அவர்களது விசாவை நிராகரிப்பதற்கான சட்டத்தை Morrison அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த சட்டத்தை முன்பு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதற்கு போதிய ஆதரவு கிடைக்காது என்று கருதப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
ஆனால், தற்போது இந்த இறுக்கமான குடிவரவு சட்டத்தை கொண்டுவருவதற்கு Morrison அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இச்சட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் நியூசிலாந்து நாட்டவர்கள் உட்பட புலம்பெயர் பின்னணி கொண்ட பலர் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச்சட்டம் தொடர்பான பூர்வாங்க தகவல்களின் அடிப்படையில், லேபர் கட்சி அதனை எதிர்க்கப்போவதாக கூறியிருந்தபோதும், அரசினால் முன்வைக்கப்படப்போகும் இறுதிவரைவின் அடிப்படையில்தான் தங்களது கருத்தை கூறமுடியும் என்று தற்போது தெரிவித்திருக்கிறது.
இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு செனெட்டிடம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஒப்படைப்பதற்கான பணிகள் தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அவ்வாறு அந்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டால், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் பாரதூரமான சட்டமாக கருதப்படும் என்று சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர்.