வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக்கொள்வதற்காக ஆஸ்திரேலியாவிலுள்ள சில பல்கலைக்கழகங்கள் குறைந்த விலையிலான கற்கை நெறிகளை விற்பனை செய்கின்ற கடைகளாக மாறியுள்ளன என்று சனத்தொகை வளர்ச்சி மதிப்பீட்டு ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி Herald Sun செய்திவெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் கற்கை நெறிகளை நிறைவு செய்துகொள்ளும் வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக்கொள்வதற்கு மேலும் இரண்டு வருடங்கள் தங்கியிருப்பதற்கு வழி செய்யும் 485 இலக்க விசாவை பெற்றுக்கொள்வதற்கு குறுகிய கற்கை நெறியொன்றை பின்பற்றும் உத்தியை கடைப்பிடிக்கிறார்கள் என்றும் - இந்த இரண்டு வருட விசாவை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து கல்வி கற்றுக்கொண்டு வேலையும் செய்வதற்கு மிகக்குறைந்த விலையில் கற்கை நெறிகளை விற்பனை செய்யும் கடைகளாக சில பல்கலைக்கழகங்கள் மாறியுள்ளன என்றும் இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016- 17 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 485 இலக்க விசாவுக்கு விண்ணப்பித்த இந்தியர்களின் எண்ணிக்கை நான்காயிரமாக இருந்தது என்றும் அந்த எண்ணிக்கை கடந்த வருடம் 14 ஆயிரமாக பெருகியுள்ளதாகவும் உள்துறை அமைச்சின் தரவுகளை மேற்கோள்காண்பித்து Herald Sun செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், ஆஸ்திரேலிய பல்லைக்கழக வாரியத்தின் தலைமை அதிகாரி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது - இந்த தகவல் தவறானது என்றும் ஆஸ்திரேலியாவுக்கு வருகின்ற வெளிநாட்டு மாணவர்களில் 85 வீதமானவர்கள் தங்கள் கற்கை நெறிகளை நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பிவிடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.