
Migration planning levels 2019-20 Source: SBS Tamil
இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவின் வருடாந்திர நிரந்தர குடிவரவு எண்ணிக்கை 30,000 குறைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அனுமதிக்கப்படும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேரில், 5,000 பேர் Global Talent (உலகளாவிய திறமை) என்று திறமை அடிப்படையில் உலகின் எந்தப் பாகங்களிலும் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
திறமை அடிப்படையில் சுயாதீனமாக வீசா பெறக்கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு, 43,000 ஆக இருந்தது. இந்த வருடம் அது 18,652 ஆக குறைக்கப் பட்டுள்ளது. இந்த நிரந்தர வீசா பெறுபவர்கள் ஆஸ்திரேலியாவில் எந்த இடத்திலும் வாழலாம் மற்றும் வேலை செய்யலாம். இது பலராலும் விரும்பப்படும் வீசா என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய திறமை அடிப்படையிலான வீசாவிற்கு 5,000 ஒதுக்கப்பட்டுள்ளதால், சிலருக்கு நிரந்தர வீசா கிடைக்கக் கூடிய சந்தர்ப்பம் குறைந்துள்ளது.
கணினி தொழில்நுட்பம் கற்று, சிட்னியில் வேலை பார்க்கும் கௌதம் கபில், கடந்த ஆண்டு மே மாதம் 70 புள்ளிகளுடன் தனது வீசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை, குடிவரவுத் துறை தன்னைத் தொடர்பு கொள்ளும் என்று காத்திருக்கிறார்.
அவரது வீசா வாய்ப்புகளைப் பற்றி கேட்டபோது, “எனக்குத் தெரியாது,” என்று அவர் கூறுகிறார். [Node_list title = "மேலும் படிக்க" uuid = "39ff87f1-48ed-4835-a1da-e135f01209f9"]
உள்துறை அமைச்சு சமீபத்தில் வெளியிட்ட தகவல்களின் படி, கடந்த மாதம் இந்த வீசாவிற்கு விண்ணப்பிக்க 100 விண்ணப்பதாரர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். கணினி தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 85 புள்ளிகள் தேவை.
“இதுதான் குறைந்த பட்ச தேவை. அழைக்கப்பட்ட பலர் 90 அல்லது 100 புள்ளிகள் பெற்றுள்ளார்கள் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். எனக்கு அழைப்பு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை,” என்று கௌதம் கபில் மேலும் கூறினார்.
இந்த வீசா பெறுவதற்கு, கணக்காளர்களுக்குத் தற்போது 90 புள்ளிகள் தேவை. குறைந்தபட்சம் 65 புள்ளிகள் உள்ள எவரும் இந்த வீசாவிற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
“நான் இங்கு படித்தேன். பல ஆண்டுகளாக இங்கு பணி புரிந்தேன். ஆஸ்திரேலிய தொழில் துறையின் அனுபவம் எனக்குண்டு. ஆனால் அவை எதுவும் இப்போது கருத்தில் கொள்ளப்படாது என்று தோன்றுகிறது.”
“பல விண்ணப்பதாரர்கள் கணக்கியல், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பல்கலைக்கழக பட்டங்களைப் பெற்றுள்ளார்கள். அது தவிர பல வருட அனுபவங்களைக் கொண்டுள்ளனர். மேலும் சிறந்த ஆங்கில மொழிப்புலமை உள்ளவர்கள். ஆனால், போட்டி அதிகம் என்பது மட்டுமல்ல, குறைந்தளவு வீசாக்கள் தான் வழங்கப்படுவதால், பலர் ஏமாற்றமடைகிறார்கள்” என்று, மெல்பேர்ணில் இயங்கும் ஒரு குடிவரவு முகவர், SBS பஞ்சாபியிடம் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தற்காலிக வீசா வைத்திருப்பவர்கள். அவர்களில் 800,000 பேர் சர்வதேச மாணவர்கள். 2018 ஆம் ஆண்டில் மட்டும் 398,563 வெளிநாட்டு மாணவர்கள் புதிதாக சேர்க்கப் பட்டிருந்தாலும், அந்த ஆண்டில் 13,138 பேருக்கு மட்டுமே நிரந்தர வீசாக்கள் வழங்கப்பட்டன.
“இதனால், சமீபத்திய பட்டதாரிகளுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெறுவது கடினமாகி வருகிறது” என்று அந்த குடிவரவு முகவர் கூறினார்.
எத்தனை பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவது என்பதை அரசு மாற்றியமைத்துள்ளது. பிராந்திய பகுதிகளில் அதிகமான புலம்பெயர்ந்தோரை குடியேற்றுவதற்கான உந்துதலுடன், 160,000 என்ற தொகையில் 23,000 வீசாக்கள் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ‘பிராந்திய வீசா’ வைத்திருப்பவர்கள் நிரந்தர வதிவிடத்திற்குத் தகுதி பெறத், குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் பிராந்திய பிரதேசங்களில் வாழ வேண்டியிருக்கும்.
இந்த ஆண்டு நவம்பரில் இரண்டு புதிய பிராந்திய வீசாக்கள் அறிமுகமாகின்றன. இந்தத் தேர்வில், திறமை சார் தகைமை பெற்ற துணையைக் கொண்டவர்கள் மற்றும் தனி நபர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகளில் மாற்றங்கள் அறிமுகமாகின்றன.
2013 ஆம் ஆண்டில் தனது மனைவியுடன் ஆஸ்திரேலியாவுக்கு வந்த கௌதம் கபில், இந்த நடவடிக்கை தன்னைப் போன்றவர்களை மேலும் ‘பெரும் பாதகத்திற்கு’ தள்ளும் என்று கூறுகிறார். ஆகஸ்ட் 2018 வரை SBS பஞ்சாபியில் கௌதம் கபில் ஒரு தயாரிப்பாளராக இருந்தார்.