KEY POINTS:
- 17 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் கருத்துத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
- Voice தொடர்பிலான கருத்துத்தேர்தல் மீதான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமையானது வாக்கெடுப்புக்கான தேதியை நிர்ணயிக்கும் செயல்முறையைத் தூண்டுகிறது.
- இரண்டு தொடக்கம் ஆறு மாதங்களுக்குள் கருத்துத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பூர்வீக குடி மக்களைப் பாதிக்கும் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து முறையான கருத்துகளை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்கான Voice to Parliament என்ற அமைப்பை நிறுவ ஏதுவாக நடத்தப்படவுள்ள கருத்து வாக்கெடுப்பு (referendum) குறித்த சட்டமுன்வடிவுக்கு செனட் அவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதையடுத்து இது சட்டமாகிறது.
குறித்த சட்டமுன்வடிவு செனட் அவையில் 52 க்கு 19 வாக்குகள் என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் ஆஸ்திரேலியர்கள் கருத்து வாக்கெடுப்பில் வாக்களிக்கவுள்ளனர்.
ஆஸ்திரேலியர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக நாடாளுமன்றத்தில் இச்சட்டமுன்வடிவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.
கருத்து வாக்கெடுப்புக்கான தேதி நிர்ணயிக்கப்படவுள்ள நிலையில் இது பெரும்பாலும் அக்டோபரில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசத்தை இன்னும் உயரத்திற்கு கொண்டுசெல்லும்வகையில் இது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு என பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த சட்டத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கிய நாள் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு நாள் என வர்ணித்த ஆஸ்திரேலிய பூர்வீககுடி விவகாரங்களுக்கான அமைச்சர் Linda Burney, Voice அமைப்பானது பூர்வீககுடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் வாழ்க்கையில் நடைமுறை மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறினார்.
"இத்துடன் அரசியல் விவாதம் முடிவடைகிறது. இனி சமூக மட்டத்தில் ஒரு தேசிய உரையாடலைத் தொடங்கலாம்" என்று அவர் கூறினார்.

Independent Senator Lidia Thorpe reacts after the passing of the Voice to Parliament in the Senate chamber at Parliament House. Source: AAP / Lukas Coch
ஆனால் இதனை விமர்சிப்பவர்கள் சிலர் இந்த முன்மொழிவு ஆபத்து நிறைந்தது என்று கூறுகின்றனர். மற்றவர்கள் இது பூர்வீககுடி பின்னணிகொண்ட மக்களுக்கு போதுமான அதிகாரம் இல்லை என்று வாதிடுகின்றனர்.
கருத்து வாக்கெடுப்பு மீதான சட்டம் குறித்த எதிரணியின் கருத்து
கடந்த திங்கட்கிழமை காலை கருத்து வாக்கெடுப்பு மீதான சட்டமுன்வடிவு செனட் அவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து கருத்துத் தெரிவித்த லிபரல் முன்னணி உறுப்பினர் Michaelia Cash, "பிளவுபடுத்தும்" Voice அமைப்பு எவ்வாறு செயல்படும் என்பது குறித்து போதுமான விவரங்களை வழங்க லேபர்கட்சி தவறிவிட்டது எனக் கூறினார்.
"ஆனால் நாங்கள் இந்த தேசத்தின் மக்களை நம்புகிறோம், மேலும் இந்த பிரச்சினையில் அவர்களின் கருத்தைக் கூறுவதற்கான உரிமை உள்ளது" என்றும் அவர் கூறினார்.
"Voice அமைப்பு எவ்வாறு செயல்படப் போகிறது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், "இல்லை" என வாக்களிக்கவும்." என Michaelia Cash குறிப்பிட்டார்.
எதிர்கட்சியின் பூர்வீகக்குடி விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளரான Warlpiri/Celtic பின்னணியுடைய Jacinta Price அவர்களும் கருத்து வாக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.

Ms Burney, seated left, was present for the debate. Source: AAP / Lukas Coch
கருத்து வாக்கெடுப்பு குறித்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமையை வரவேற்றுள்ள கிரீன்ஸ் கட்சி
நாடாளுமன்றில் Voice அவை தொடர்பிலான கருத்து வாக்கெடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என கிரீன்ஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் Dorinda Cox தெரிவித்தார்.
"நாடாளுமன்றத்தின் பணிகள் முடிந்துவிட்டன. கருத்து வாக்கெடுப்பு ஏன் முக்கியமானது மற்றும் Voice அமைப்பு ஏன் மிகவும் முக்கியமானது என்பதை அனைத்து ஆஸ்திரேலியர்களுடனும் பகிர்ந்துகொள்ளும் வகையில் கருத்து வாக்கெடுப்புக்கு ஆதரவான "ஆம்" பிரச்சாரத்திற்கான நேரம் இது" என்று அவர் கூறினார்.

Minister for Indigenous Australians Linda Burney poses for a photo with 40 members of Jawun at Parliament House in Canberra. Source: AAP / Mick Tsikas
'போலி மற்றும் பாசாங்கு' என Voice அமைப்பை விமர்சிக்கும் Lidia Thorpe
DjabWurrung, Gunnai மற்றும் Gunditjmara பின்னணி கொண்ட சுயாதீன செனட்டர் Lidia Thorpe, கருத்து வாக்கெடுப்பைப் புறக்கணிக்குமாறு ஆஸ்திரேலியர்களை வலியுறுத்துகிறார்.
இந்த சட்டத்தை "சவப்பெட்டியின் இறுதி ஆணி" என்று விவரித்த Lidia Thorpe "எங்களுக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்காத இந்த பேரழிவு யோசனைக்கு நான் இல்லை என்று வாக்களிக்கிறேன்" என்று கூறினார்.

Independent senator Lidia Thorpe reacts during debate on the Voice to Parliament in the Senate chamber at Parliament House. Source: AAP / Lukas Coch
Pauline Hanson-னின் கருத்து
Voice தொடர்பிலான நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய One Nation senator Pauline Hanson, திருடப்பட்ட தலைமுறைகள் தொடர்பில் நினைவூட்டியதுடன் இது ஏன் இடம்பெற்றது எனக் கேட்குமாறு ஆஸ்திரேலியர்களை வலியுறுத்தினார். இதையடுத்து கருத்துத் தெரிவித்த செனட்டர் McCarthy, வரும் மாதங்களில் நடக்கவுள்ள விவாதங்கள் குறித்து தான் கவலைப்படுவதாகவும், சில வர்ணனைகளைக் கேட்கும்போது சிறிது கவலையாக உணர்கிறேன் என்றும் கூறினார்.
அனைத்து ஆஸ்திரேலியர்களும் ஆழமாக சிந்திப்பதுடன், Voice அமைப்பு தொடர்பிலான விவாதம் முழுவதும் உங்களது மனதில் தோன்றுவதை மரியாதைக்குரிய விதத்தில் வெளிப்படுத்துமாறு தான் கேட்டுக்கொள்வதாகவும், அப்போதுதான் ஒரு நாடாக நமது சிறப்பைக் கண்டறிய முடியும் எனவும் செனட்டர் McCarthy குறிப்பிட்டார்.

Senator McCarthy conceded concern over the tenor of the debate, just moments after Pauline Hanson's (pictured) comments. Source: AAP / Lukas Coch
Voice அமைப்பு மாற்றத்தைக் கொண்டுவரும் என்கிறார் Linda Burney
"நீண்ட காலமாக பூர்வீக குடி பின்னணி அல்லாத ஆஸ்திரேலியர்களை விட பூர்வீக குடி பின்னணிகொண்ட ஆஸ்திரேலியர்கள் தொடர்ந்து மோசமானநிலையில் உள்ளனர் ... அதை சரிசெய்வதற்கான சிறந்த வாய்ப்பே Voice அமைப்பு என பூர்வீககுடி விவகாரங்களுக்கான அமைச்சர் Linda Burney குறிப்பிட்டார்.
பூர்வீகக்குடி மக்களின் கருத்துக் கேட்கும் Voice என்ற அமைப்பு, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சுதந்திரமான கட்டமைப்பாக இருக்கும்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கும் அரசிற்கும் இந்த அமைப்பு ஆலோசனை வழங்கும்.
பூர்வீகக்குடி மக்களைப் பாதிக்கும் விடயங்கள் குறித்து அவர்களது கருத்துகளை இந்த அமைப்பு முன்வைக்கும்.
கருத்து வாக்கெடுப்பை நிறைவேற்றுவதற்கு, தேசிய அளவில் பெரும்பான்மையான வாக்காளர்களும், ஆறு மாநிலங்களில் குறைந்தது நான்கு மாநிலங்களில் பெரும்பான்மையான வாக்காளர்களும் ‘ஆம்’ என்று
வாக்களிக்க வேண்டும்.
அதாவது, கருத்து வாக்கெடுப்பை நிறைவேற்றுவதற்கு, இரட்டைப் பெரும்பான்மை தேவை.
இந்தப்பின்னணியில் கருத்து வாக்கெடுப்பை "Canberra Voice" என்று வடிவமைக்கும் எதிர்கட்சி கூட்டணியின் முயற்சிகளை "அப்பட்டமான பொய்" என்று சுயாதீன செனட்டர் David Pocock விவரித்தார்.
2017 இல் பூர்வீக குடி தலைவர்களால் வெளியிடப்பட்ட -இதயத்திலிருந்து வெளியாகும் உலுரு அறிக்கையின் கோரிக்கைகளில் ஒன்று Voice to Parliament ஆகும்.
Voice என்ற அமைப்பு ஊடாக இந்நாட்டின் பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களை ஆஸ்திரேலியாவின் முதற்குடிகளாக, அரசியலமைப்பில் அங்கீகரிப்பது குறித்து 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில் மக்கள் தங்கள் கருத்தைக் கூறுவார்கள்.
கருத்து வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் வெற்றி பெற்றால் பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள், மற்றும் பரந்த பொது மக்களுடன் Voice என்ற அமைப்பின் வடிவமைப்பைத் தீர்மானிக்கக் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, Voice என்ற அமைப்பு உருவாக்கப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்ட முன் வரைவு அறிமுகம் செய்யப்படும். அது சட்டமாகுமா என்பதை நாடாளுமன்றம் தீர்மானிக்கும்.
நாடாளுமன்றத்தில் Voice என்ற அமைப்பு குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதும், சட்டம் நடைமுறைக்கு வந்து Voice என்ற அமைப்பு நிறுவப்படுவதற்கான செயற்பாடு தொடங்கும்.
National கட்சியின் நிலைப்பாடு
National கட்சி கருத்து வாக்கெடுப்பிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், தாம் "இல்லை" என்ற பிரச்சாரத்திற்கே ஆதரவளிப்பதாகவும் National கட்சியின் தலைவரான David Littleproud கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்திருந்தார்.
Voice அமைப்பு "உண்மையாக இடைவெளியை மூடும்" என்று தான் நினைக்கவில்லை எனவும், தாம் இன்னமும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Voice அமைப்பு இல்லாமலேயே சமூக மட்டத்தில் தீர்வுகள் எட்டப்படலாம் என அவர் வலியுறுத்தினார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.