நவம்பர் மாதத்தில் பல ஆண்கள் புதிதாக மீசை வைத்துக் கொண்டிருப்பதை ஆஸ்திரேலியாவில் வாழும் பலர் அவதானித்திருப்பீர்கள். அது ஆரம்பித்த வரலாறு சுவையானது தான். சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்னர், மெல்பேர்ண் நகரில் வசிக்கும் இரண்டு நண்பர்கள் (Travis Garone மற்றும் Luke Slattery) பேசிக் கொண்டிருக்கும் போது, ஆண்கள் மீசை வைப்பது அருகி வருவது குறித்து கதை போனது. அவர்களையும் சேர்த்து 30 ஆண்கள் மீசை வைத்துக் கொண்டார்கள்.
அதற்கடுத்த வருடம், 2004 ஆம் ஆண்டில், மீசை வைத்துக் கொள்வது மட்டுமின்றி, ஆண்களுக்கே தனித்துவமான பிரச்சனைகள் குறித்து பிரச்சாரமும் செய்வதென்று முடிவெடுத்தார்கள். மீசை வைக்கும் மாதமான நவம்பர் மாதத்திற்கு மொவெம்பர் (Movember) என்று பெயர் சூட்டி அதனை பதிவும் செய்தார் Travisஇன் சகோதரர் Adam Garone. 450 பேர் கலந்து கொண்ட அந்த ஆண்டில், ‘மொவெம்பர்’ பிரச்சாரம் மூலம் 54 ஆயிரம் டொலர்களை சேர்த்து Prostate Cancer Foundation of Australia என்ற ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கினார்கள்.

Travis Garone மற்றும் Luke Slattery Source: movember.com
இப்படியாக ஆரம்பித்த ‘மொவெம்பர்’ பிரச்சாரம், தற்போது 21 நாடுகளில் செயல் படுத்தப்படுகிறது. இந்தப் பிரச்சாரம் மூலம், ஆண்களின் உடல், உள நல திட்டங்களுக்கு, ஆஸ்திரேலியாவில் மட்டுமே 730 மில்லியன் டொலர்கள் திரட்டப்பட்டுள்ளன.
Prostate புற்றுநோய் மற்றும் ஆண்களின் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்துத் துறையும் தன் பங்களிப்பை செய்ய இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளது. பேரூந்துகள் மீசை வைத்துள்ளது மட்டுமின்றி, சில பேரூந்துகளை, வெவ்வேறு கலாச்சார பின்னணி மற்றும் வயதுடைய ஆண்களின் கறுப்பு-வெள்ளை நிழற்படங்கள் அலங்கரிக்கின்றன.

A Campaign Poster Source: movember.com

Movember wrapped Sydney bus Source: Transport NSW