ஆஸ்திரேலியாவுக்கு working holiday விசாவில் வந்து 12 மாதங்கள்வரை வேலைசெய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு ஆசிய பசுபிக் நாடுகளில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருப்பதால் இந்த விசா வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையையும் தற்போது விசா வழங்குவதற்கு உத்தேசித்துள்ள நாடுகளிலிருந்து உள்வாங்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கு ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.
ஆனால் மொறிஸன் அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு செனட் சபையில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
சுமார் 44 நாடுகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி மேற்படி working holiday விசாவில் வந்து ஆஸ்திரேலியாவில் - குறிப்பாக பண்ணைப்புறங்களில் வேலைசெய்ய முடியும்.
ஆனால், இந்த விசாவுக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பலத்த வரவேற்பு கிடைத்திருப்பதால் தொழிலாளர்களை உள்வாங்கும் நாடுகளின் எண்ணிக்கையை மேலும் 13 நாடுகளால் (இந்தியா, பிரேசில், மெக்ஸிக்கோ, பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிஜி, சொலமன் தீவுகள், குரோஷியா, லத்வியா, லித்துவேனியா, அன்டோரா, மொனாகோ மற்றும் மொங்கோலியா) அதிகரிப்பதற்கும் அவற்றிலிருந்து உள்வாங்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஆண்டொன்றுக்கு ஐயாயிரமாக அதிகரிப்பதற்கும் மொறிஸன் அரசு தீர்மானித்துள்ளது.
அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் சம்மேளனம், இந்த தீர்மானமானது உள்நாட்டு பணியாளர்களுக்கு துரோமிழைப்பது என்றும் உள்நோக்கம் கொண்ட அரசின் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளது.
லேபர் கட்சி இது விடயத்தில் இன்னமும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.