கடலில் மூழ்கும் அபாயத்தில் பசுபிக் தீவுநாடுகள்!

Gokulan

Source: AAP

புவி வெப்பமடைதலைச் சந்திப்பதால், கடல் மட்டம் உயர்கிறது. இது பல நாடுகளுக்கு நெருக்கடியாக மாறிக்கொண்டுள்ளது. குறிப்பாக தங்கள் நாடுகள் கடலில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் பசுபிக் தீவு நாடுகளை ஆட்கொண்டுள்ளது. துவாலு தீவு நாட்டில் பசுபிக் தீவுகளின் மன்றம் (Pacific Islands Forum) ஏற்பாடு செய்திருந்த பசிபிக் தலைவர்களின் கூட்டம் பத்து நாட்களுக்கு முன்பு (16 ஆகஸ்ட் 2019) நடந்து முடிந்தது. இதில் பகிரப்பட்ட முடிவுகளை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் கோகுலன் அவர்கள்.


பசிபிக் தீவுகள் மன்றம் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய பேச்சுவார்த்தை:

பார்ப்பவர்கள் கண்களை மகிழ்ச் செய்யும் அழகான கடற்கரைகள், மனதைக் கவரும் சிறிய மணல்திட்டுக்கள், தொன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், இவைகளைக் கொண்ட ஒரு சிறிய தென்-பசுபிக் நாடு, துவாலு.
கடந்த வாரம், ஆஸ்திரேலியாவின் பிரதமரும், பிற பசுபிக் தீவுகளின் தலைவர்களும் சென்ற இடம். தங்களின் விடுமுறைக்காக அல்ல, ஆனால் பசுபிக் தீவுகளின் மன்றம் (Pacific Islands Forum) ஏற்பாடு செய்திருந்த பேச்சுவார்த்தைக்காக வந்திருந்தனர்.

பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ஆயிரக்கணக்கான தீவுகள் மற்றும் அடால்கள் இணைந்து ஒரு அமைப்பாக பசுபிக் தீவுகள் மன்றம் என்று அழைக்கப்படுகிறது. இதில் பிஜி, சாலமன் தீவுகள், டோங்கா, சமோவா, வனவ்ட்டு, பிஎன்ஜி மற்றும் துவாலு போன்ற பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அண்டை நாடுகளான, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவையும் இம்மன்றத்தில் இணைந்து, வர்த்தகம், கல்வி மற்றும் சுற்றுலா போன்ற விஷயங்களைப் பற்றி பேசுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கூடுவர். இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தையில் காலநிலை மாற்றம் பற்றிய செயல்பாடுகள் மிகமுக்கியப் பங்கு வகித்தது.

குறிப்பாக, துவாலு தீவிற்கு, காலநிலை மாற்றம் (Climate Change), ஒரு முக்கியமான மற்றும் மிகப்பெரிய பிரச்சனை. ஏனெனில், துவாலு நாட்டுத் தீவுகளின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து 2 மீட்டருக்கும் குறைவாக உள்ளது. அதாவது கடல் மட்டத்தில் ஏதேனும் உயர்வு ஏற்பட்டால் மிக மோசமான அழிவைச் சந்திக்க நேரிடும். உண்மையில், அடுத்த நூற்றாண்டில் நாடு முழுவதும் கடலுக்குள் மறைந்துவிடும் என்று நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். துவாலு மட்டுமல்ல, உயரும் கடல்நீர் மட்டமும், தீவிர வானிலை மாற்றங்களும், பசிபிக் முழுவதிலும் பேரழிவு தரக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் 500 மில்லியன் டாலர் நிதி உதவியும், பசுபிக் தீவுகள் மன்றத் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னதான எதிர்பார்ப்பும்:

துவாலுவில் நடந்த பசிபிக் தலைவர்களின் கூட்டத்தில் பங்கு பெற வருவதற்கு முன்னதாக, 500 மில்லியன் டாலர்கள் நிதியினை உறுதியளிப்பதாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் திரு. மோரிசன் அவர்கள் அறிவித்திருந்தார்.

இந்த நிதியானது, 2020 ஆம் ஆண்டு தொடங்கி, வரும் 5 ஆண்டுகளில், பசிபிக் நாடுகளுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் 'காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவு பின்னடைவுகள் இருந்து மீளுதல்' ஆகியவற்றில் முதலீடு செய்ய உதவும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் கூறியிருந்தார். மேலும், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் இந்த நிதி உதவி நோக்கமாகக் கொண்டுள்ளது எனக் கூறினார்.

ஒரு அறிக்கையில், திரு. மோரிசன் அவர்கள், இந்த நிதியானது "எங்கள் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு குறைப்பு கடமைகளை எங்கள் நாட்டிலேயே நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், எங்கள் அண்டைநாட்டினர்க்கும், நண்பர்களுக்கும் உதவுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது" என்றார்.

இதே நேரத்தில், பசுபிக் தீவுகளின் மீதான சீனாவின் செல்வாக்கையும், வளர்ந்து வரும் நெருக்கமான உறவுகளையும், ஆஸ்திரேலியா உன்னிப்பாகக் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பசுபிக் தீவுகள் மன்றத்தின் கூட்டத்தொடரில் முன்னதாகப் பேசிய, பிஜி நாட்டின் பிரதமர் பிராங்க் பைனிமராம, "காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்காத நிலக்கரியிலிருந்து, மாற்று எரிசக்தி ஆதாரங்களுக்கு விரைவான மாற்றத்தை அடைய, முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என ஆஸ்திரேலியாவிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்று கூறினார். மேலும், "நீங்கள் எதிர்கொள்ளாத காலநிலை மாற்ற மற்றும் இருப்பிட அச்சுறுத்தலை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்பதை உங்கள் அரசாங்கமும், மக்களும் முழுமையாகப் புரிந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்று வலியுறுத்தினார்.

துவாலு பிரகடனமும், ஆஸ்திரேலியாவின் நிலைப்பாடும்:

பசுபிக் தீவுகள் மன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில், பசுபிக் பெருங்குடலின் சிறிய தீவு மாநிலங்கள் (எஸ்ஐஎஸ்) குழு, துவாலு பிரகடனத்திற்கு ஒப்புக் கொண்டது. இந்தப் பிரகடனம், காலநிலை மாற்ற நெருக்கடி நிலையை ஏற்றல், எரிவாயு உமிழ்வு குறைப்பு இலக்குகளை திருத்துவதற்கு நாடுகளை ஊக்குவிப்பது மற்றும் நிலக்கரி பயன்பாட்டில் இருந்து விரைவான மீட்சி என்பவற்றை உள்ளடக்கியது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அடங்கிய பசிபிக் தீவுகள் மன்றத்தின் தலைவர்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று அவர்கள் நம்பினர்.

ஆனால், ஐ.நா.வின் பசுமை காலநிலை நிதியத்திற்கான நிதிப்பங்கீடு மற்றும் எரிவாயு உமிழ்வு குறைப்பு மற்றும் நிலக்கரி பயன்பாடு தொடர்பான பிரிவுகள் குறித்து ஆஸ்திரேலியா உடன்பாடு இல்லாத மனப்பான்மையை வெளிப்படுத்தியது. அதே நேரத்தில் நியூசிலாந்திலும் பசுமை காலநிலை நிதியத்தின் பிரிவு குறித்து உடன்பாடு இல்லாமல் இருந்தது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள், இது சம்பந்தமாக 12 மணி நேரம் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இறுதியில் காலநிலை மாற்றம் குறித்த அறிக்கை குறித்து ஒரு உடன்பாட்டை எட்டினர்.

சிறிய பசிபிக் நாடுகளின் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துவாலு பிரகடனத்தில் அவர்களால் உடன்பாட்டை எட்ட முடியவில்லை. அதற்கு பதிலாக, நிலக்கரிப் பயன்பாடு மற்றும் எரிவாயு உமிழ்வு குறைப்பு குறித்து வெவ்வேறு விதிமுறைகளுடன், கைனகி II எனும் தனிப் பிரகடனம் உருவாக்கப்பட்டது.

தலைவர்களின் கருத்துக்கள்:

பல ஆண்டுகளாக, பசிபிக் தீவு வாசிகள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பெரிய மற்றும் வளர்ந்த நாடுகளிடம், காலநிலை மாற்றம் குறித்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சி வருகின்றனர். அதுதான் துவாலு பசுபிக் தீவுகள் மன்றக் கூட்டத்தின் முக்கியச் செய்தி.

துவாலுவின் பிரதம மந்திரி என்லே சோபோவாகா கூறுகையில், "ஆஸ்திரேலியாவில் உங்கள் பொருளாதாரத்தின் நிலைமையைக் காப்பாற்றுவதில் நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள். துவாலுவில் எனது மக்களைக் காப்பாற்றுவதில் நான் கவலைப்படுகிறேன்."

கார்பன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களை தடை செய்வது உள்ளிட்ட ஒரு ஒப்பந்தத்தில் மன்றத் தலைவர்கள் கையெழுத்திட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால் அது ஆஸ்திரேலியப் பிரதமர் செய்யத் தயாராக இருக்கவில்லை.

பசிபிக் காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலை பிரதமர் ஒப்புக் கொண்டாலும், நிலக்கரி இங்கு ஒரு முக்கியமான தொழிலாகும், இது ஏராளமான மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது, ஆஸ்திரேலியர்களின் நலன்களைக் கவனிக்க வேண்டும் என்று கூறினார். இறுதியில், ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு புதிய ஒப்பந்தம் எழுதப்பட்டது.

ஸ்காட் மோரிசன் அவர்கள் கூறுகையில்: "எங்களால் முடிந்த ஒப்பந்தங்களை எங்களால் அடைய முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அது முன்னோக்கிச் செல்வதற்கான தளத்தை வழங்குகிறது."

பசிபிக் தீவுவாசிகள் காலநிலை மாற்றத்தை சமாளிக்க உதவுவதற்காக 500 மில்லியன் டாலர் உதவிப் பணம், திரு மோரிசன் உறுதியளித்தது வரவேற்கத்தக்கது என்றாலும், துவாலுவின் பிரதமர் தான் ஏமாற்றமடைந்ததாகக் கூறினார்.

துவாலுவின் பிரதம மந்திரி எனேல் சோபோகா மேலும் கூறுகையில்,
"நீங்கள் எவ்வளவு பணம் உதவியாகத் தந்தாலும், புதிய நிலக்கரி சுரங்கங்களைத் திறக்காதது உட்பட, கார்பன் உமிழ்வைக் குறைப்பது போன்ற, சரியான காரியங்களைச் செய்யக் கூடாததற்கான எந்தக் காரணத்தையும் அது உங்களுக்குத் தரவில்லை." என்று கூறினார்.

உண்மையில், நிறைய பசிபிக் தலைவர்கள் ஆஸ்திரேலியாவை விமர்சித்தனர் என்றும், அவர்கள் இன்னும் அதிகமாக காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் செயல்களைச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த வருடத்திற்கான, பசுபிக் தீவுகள் மன்றத் தலைவர்கள் கூட்டத்தொடர் முடிந்துவிட்ட நிலையில், தங்கள் செய்தியை உலக நாடுகள் மறக்க மாட்டார்கள் என்று பசிபிக் தீவுகளின் மக்கள் நம்புகிறார்கள்.


Share