ஒவ்வொரு ஆண்டும், பல ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் வேலை, கல்வி, வாழ்க்கை முறை, குடும்பம் அல்லது சிறந்த சமூக ஆதரவைப் பெறுதல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே குடிபெயர்கின்றனர்.
சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் சேவை வழங்குநர்கள் நாடு முழுவதும் வேறுபடலாம் என்பதால் சில விடயங்களை முன்கூட்டியே சரிபார்ப்பது உங்கள் குடிபெயர்வு சீராக நடைபெற உதவும்.
ஆஸ்திரேலிய மாநிலங்களுக்கு இடையே குடிபெயர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களை விட வெளிநாட்டில் பிறந்தவர்கள் இவ்வாறு மாநிலங்களுக்கிடையில் குடிபெயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒரு புதிய நாட்டிற்குப் புலம்பெயர்வது என்பது குறிப்பிடத்தக்க உழைப்பையும் மாறுதல்களையும் உள்ளடக்கியது என்பதால், ஆஸ்திரேலியாவில் குடியேறிய பின்னர் மீண்டும் மாநிலங்களுக்கு இடையே குடிபெயர்வதென்பது இரண்டு முறை புலம்பெயர்வதற்கு ஒப்பானது.

a young couple unpack their belongings as they settle into their new loft apartment . Credit: E+
மாநிலங்களுக்கிடையில் குடிபெயரும்போது நீங்கள் சரிபார்க்கவேண்டிய பட்டியலில் உள்ளடங்கியிருக்க வேண்டிய முதலாவது முக்கிய விடயம் - அரசுத் துறைகள், வங்கிகள், உங்கள் மாநிலம் அல்லது பிராந்திய போக்குவரத்து ஆணையம் மற்றும் பிற சேவை வழங்குநர்களிடம் உங்கள் முகவரி மாற்றத்தைப் பதிவு செய்தலாகும். பெரும்பாலான மாற்றங்களை ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும்.
இந்தியாவில் இருந்து வந்தபோது முதலில் சிட்னியில் குடியேறிய பல்லவி தக்கார் பின்னர் தொழில் வாய்ப்புக்காக மெல்பனுக்கு சென்றார்.
நிதி தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்க அதற்கேற்றவாறு திட்டமிடுவது திடீர் சிக்கல்களைத் தடுக்க உதவுமென அவர் ஆலோசனை சொல்கிறார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்தியத்திலும் மோட்டார் வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பான அதன் சொந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இருப்பதால், நீங்கள் இந்த ஆவணங்களை மாற்ற வேண்டும். அவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு செலவாகலாம். அதேநேரம் குறிப்பிட்ட உள்ளூர் சாலை விதிகளைப் பற்றி அறிந்து கொள்வதும் அவசியம். கூடவே பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகள் வேறு, டிக்கெட் நடைமுறைகளும் வேறு என்பதையும் கவனிக்க வேண்டும்.

Flat lay of real estate concept ***These documents are our own generic designs. They do not infringe on any copyrighted designs. Source: iStockphoto / Rawpixel/Getty Images/iStockphoto
உங்கள் விவரங்களை புதுப்பிக்க ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் பல்வேறு தெரிவுகளை வழங்குகிறது என்று AMES ஆஸ்திரேலியாவின் பொது விவகார மேலாளர் Laurie Nowell கூறுகிறார்.
நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் அல்லது எந்த வகையான பள்ளியில் உங்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் ஆஸ்திரேலியா ஒரு தேசிய பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது.
இருப்பினும், பள்ளி தவணைகள், சான்றிதழ்கள் மற்றும் பாடங்கள் மாறுபடுவதால், இதுதொடர்பில் ஆராய்ச்சியை மேற்கொள்வது உங்களது பிள்ளைகளை புதிய பள்ளியில் சேர்ப்பதற்கு உதவும் என Laurie Nowell பரிந்துரைக்கிறார்.
மாநிலத்திற்கு மாநிலம் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் மற்றும் சேவை வழங்குநர்கள் வேறுபடலாம் என்பதால், குடிபெயர்வதற்கு முன் இதனைச் சரிபார்க்கவும் என பல்லவி தக்கார் நினைவூட்டுகிறார்.

Credit: Ariel Skelley/Getty Images
தமக்குரிய நடைமுறை ஆலோசனைகளைப் பெறுவதற்கு சமூக ஊடக தளங்கள் பயனுள்ளதாக இருப்பதாக பல்லவி தக்கார் கூறுகிறார்.
சமூக அமைப்புகளைத் தவிர, settlement சேவை வழங்குநர்கள் மற்றும் migrant resource centreகளும் உதவ முடியும் என்று Laurie Nowell கூறுகிறார். மொழிபெயர்ப்பு உதவி தேவைப்படுபவர்கள் அரசு வழங்கும் இலவச மொழிபெயர்ப்பு சேவைகளையும் பயன்படுத்தலாம் என அவர் ஆலோசனை சொல்கிறார்.
ஆஸ்திரேலியாவில் மிகக் கடுமையான quarantine சட்டங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்வது முக்கியம், மேலும் இவை மாநிலங்களுக்கு இடையே செல்லும்போதும் பொருந்தும்.
தடை செய்யப்பட்டுள்ள தாவரங்கள், விலங்குப் பொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்களை விட்டுச் செல்லுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் தகவலுக்கு, ஆஸ்திரேலிய அரசின் interstate quarantine இணையதளத்தைப் பார்க்கவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.