குளிர் காலத்தில் நம்மை சூடாக வைத்திருக்க ஆடைக்கு மேல் ஆடை அணிந்துகொள்வோம். ஆனால் சூடான நாட்களில் நம்மை குளிர்ச்சியாக வைத்திருப்பது மிகவும் சவாலானது.
குறிப்பாக 37 டிகிரி செல்சியசை விட வெப்பநிலை அதிகரிக்கும் போது உடல் வெப்பநிலையை சமநிலையாக பேண நமது உடல் கடினமாக உழைக்கவேண்டியுள்ளது.
மிகவும் குளிரான காலநிலையைவிட மிகவும் சூடான காலநிலை நம்மில் கடும் பாதிப்புக்களை உண்டுபண்ணக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
வெப்பநிலை 38 டிகிரி செல்சியசைவிட அதிகமாக இருக்கும்போது வெளியில் தலைகாட்டுவதையே தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் அதீத வெப்பத்தினால் உடல்நிலை பாதிப்படைவது அவரவர் உடல்வாசியைப் பொறுத்தது. அதுமட்டுமல்ல வளிமண்டலத்தில் ஈரப்பதன் எவ்வாறு உள்ளது என்பதுடன் நாம் எந்தளவு உடல் ஆரோக்கியத்தைப் பேணுகிறோம் என்பதையும் பொறுத்தது.
வெப்பநிலை ஏற்படுத்தும் தாக்கத்தை இந்த வளிமண்ட ஈரப்பதன் மேலும் அதிகரிக்கச்சசெய்வதாக சொல்லப்படுகிறது.
வெப்பநிலை 38 டிகிரி செல்சியசை விட அதிகமாகவும் ஈரப்பதன் 20 வீதமாகவும் இருக்கும்போது ஒருவர் வேலை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என International guidelines for working in the heat குறிப்பிடுகிறது.
மிகுந்த வெப்பத்தினால் கர்ப்பிணிப்பெண்களும், முதியவர்களும் சிறுவர்களுமே அதிகம் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
வெப்பநிலை அதிகமாகும் போது உடல் மிகவும் சூடாகி நமது முகம் சிவத்து மயக்கம் வருவது போல இருக்கலாம். இந்தநிலை வந்தால் நாம் உடனடியாக அதிக நீர் அருந்துவதுடன் குளிர்மையான இடத்தில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். அப்படிச் செய்தும் மாற்றம் இல்லையென்றால் வைத்தியரின் உதவி பெறுவது அவசியம் என்று சுகாதார வல்லுனர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
அதிகமான சூட்டினால் நமது சிந்தனைத்திறன் பாதிக்கப்படும். மிகவும் சூடான ரத்த நாளங்கள் காரணமாக இதயம் பாதிக்கப்படலாம். சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.
எனவே சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நம்மை எப்படி குளிர்மையாக வைத்திருப்பதென பார்ப்போம்.
கோடை காலத்தில் உடல் Dehydrate ஆகாமல் தடுப்பதற்கு நிறைத் தண்ணீர் பருகுங்கள். குளிர்மையான பழங்கள் மற்றும் சாலட் வகைகளை அதிகம் உண்ணலாம்.
வெளியில் செல்லும் போது மறக்காமல் சன் கிளாஸ், தொப்பி அல்லது குடை எடுத்துச் செல்லுங்கள். பொருத்தமான ஆடை அணியுங்கள். அத்துடன் சன் ஸ்கிரீன் லோஷன் SPF30+ பூசிக்கொள்ளுங்கள். வெயில் அதிகம் இல்லாத நேரங்களில் கூட UV கதிர்வீச்சு அதிகம் இருக்கும் என்பதால் எப்போதும் சன் ஸ்கிரீன் லோஷன் தடவிக் கொள்வது நல்லது.
Fans, coolers, குளிரூட்டி போன்றவற்றைப் பாவித்து வீட்டைக் குளிர்மையாக்குங்கள். உங்கள் குளிரூட்டிகளை 24 டிகிரியில் வைத்துக் கொள்ளுங்கள். இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்ல உங்கள் உடல் வெப்பநிலையையும் சமநிலையில் பேண உதவும்.
Shopping centres,சினிமா, நூலகம் போன்ற இடங்களுக்குச் செல்வதன் மூலம் வெப்பத்தின் பிடியிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.
வீட்டின் ஜன்னல் blinds போன்றவற்றை மூடி வையுங்கள். இதன்மூலம் வீடு அதிகம் சூடாவதைத் தடுக்கலாம்.
நீந்துதல் அல்லது குளிர் நீரில் குளிப்பதன் மூலம் அதீத வெப்பத்திலிருந்து சற்றே விடுதலை பெறலாம்.
வெப்பம் அதிகமான நாட்களில் காபி, டீ மற்றும் மதுபானம் அருந்துவதைத் தவிர்க்கவும். இது Dehydration ஐ இன்னும் அதிகரிக்கும்
கோடை காலத்தில் பலர் கடற்கரை மற்றும் ஆற்றங்கரைகளுக்குச் சென்று நீந்துவது வழக்கம். நீந்துவதற்கு பாதுகாப்பான இடம் என வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மட்டும் நீந்துங்கள்.
அதிக சூடான காலப்பகுதியில் எங்காவது குளிர்மையான இடங்களுக்கு விடுமுறை செல்லாம்.