ஆஸ்திரேலியாவுக்கான 476 விசா விண்ணப்ப பரிசீலனைக் காலப்பகுதி 41 மாதங்களாக அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவிற்கான Skilled recognised graduate visa (subclass 476) விசாவிற்கு விண்ணப்பிக்கும் ஒருவர், அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி 41 மாதங்கள் ஆகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Australia Skilled Migration

Source: Getty Images

Subclass 476 விசா என்பது, வெளிநாடுகளிலுள்ள பொறியியல்துறை பட்டதாரிகள், ஆஸ்திரேலியாவில் சுமார் ஒன்றரை ஆண்டுகள்வரை தங்கியிருந்து கல்விகற்க அல்லது பணிபுரிய அனுமதிக்கும் விசாவாகும்.

இவ்வாறு ஆஸ்திரேலியா வருவதற்கு விண்ணப்பித்துவிட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள்வரை காத்திருக்க நேரிடுவதால், வெளிநாட்டு பொறியியல்துறை பட்டதாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் அதேநேரம் அவர்களது காலமும் விரயமாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 12 மாதங்களில் பொறியியல்துறை சார்ந்த வேலை வெற்றிடங்களில் சுமார் 97 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக Engineers Australia அமைப்பு தெரிவித்துள்ளதுடன் பொறியிலாளர்களுக்கான  பற்றாக்குறையும் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வருவதற்குத் தயாராகவுள்ள பொறியியலாளர்களும் அதற்குரிய விசாவைப் பெறுவதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளதால், நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய பல கட்டுமானப்பணிகள் தாதமடைய நேரிடலாம் என Engineers Australia சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் என பல நாடுகளைச் சேர்ந்த பல பட்டதாரிகள், இவ்விசாவைப் பெறுவதற்காக தாம் இன்னமும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளதுடன், தமது விசா தொடர்பில் உள்துறை அமைச்சிடம் தொடர்புகொண்டு பேச முடியாமலுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வரை காத்திருக்க நேரிடுவதால், இடையிடையே புதுப்புது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தற்போது சுமார் 6000 பேரது விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலிக்கப்பட வேண்டிய நிலையில் உள்துறை அமைச்சுவசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் பற்றாக்குறை மற்றும் கொரோனா பரவல் போன்றவை காரணமாகவே, விசா விண்ணப்ப பரிசீலனை காலப்பகுதி கடந்த 2018 முதல் இந்தளவிற்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share
Published 16 June 2022 2:36pm
Updated 16 June 2022 2:41pm

Share this with family and friends