ஆனால் லேபர் கட்சி ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் கழிகின்ற நிலையில், இந்த வாக்குறுதியை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பில் அண்மையில் Guardian-க்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த குடிவரவு அமைச்சர் Andrew Giles, தமது வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் அந்த வாக்குறுதியை லேபர் அரசு மறந்துவிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானால் எப்போது இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனக் கேட்டதற்கு, கூடிய விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் Andrew Giles தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
கடந்த 10 ஆண்டுகளாக, TPVகள் மற்றும் SHEV களில் இருப்பவர்கள் நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மக்களின் விரக்தியையும் கவலையையும் நான் உண்மையில் உணர்கிறேன்.
தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ளவர்கள் நிலையான எதிர்காலத்திற்கு தகுதியானவர்கள். குறிப்பாக தங்கள் வணிகங்களை மேம்படுத்த, வீடுகளை வாங்க, படிக்க மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்பை பெற தகுதியானவர்கள்- அவர்களில் பலர் regional பகுதிகளில் உள்ளனர்.
இவர்களுக்கான நிரந்தர விசாவை வழங்குவதன் ஒரு கட்டமாக TPV/SHEV வைத்திருப்பவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் நாடாளுமன்றின் cross bench உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசனை செய்துள்ளோம்.
தற்காலிக பாகாப்பு விசாவுடன் உள்ளவர்களுக்கான தீர்வு பயனுள்ளதாகவும் நீடித்ததாகவும் இருக்கவேண்டுமென்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
கடந்த தேர்தலில் நாங்கள் செய்த அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவோம். அதற்கான பதையில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். நிச்சயம் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் Andrew Giles தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதேகருத்துக்களை குடிவரவு அமைச்சர் தனது twitter பக்கத்திலும் இம்மாத ஆரம்பத்தில் பகிர்ந்திருந்தார்.
ஆஸ்திரேலியாவில் சுமார் 19 ஆயிரம் பேர் TPV அல்லது SHEV விசாவுடன் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க ஆஸ்திரேலியாவில் bridging விசாவுடன் வாழ்ந்துவரும் சுமார் 12 ஆயிரம் பேர் தமக்கான எதிர்காலம் என்ன என கேள்வியெழுப்பியுள்ளனர்.
TPV மற்றும் SHEV வைத்திருப்பவர்களுக்கான தீர்வு தொடர்பில் அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள Refugee Action Coalition இன் பேச்சாளர் Ian Rintoul, bridging விசாவிலுள்ளவர்களையும் அரசு கவனத்திலெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
Bridging விசாவில் உள்ளவர்கள் தொடர்பில் அரசிடம் எதுவித திட்டமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள Ian Rintoul, TPVகள் மற்றும் SHEV விசாக்களில் உள்ளவர்களுடன் சேர்த்து இவர்களுக்கும் நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.