ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிப்பு! காரணம் என்ன?

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுக்கான புதிய கட்டணம் தற்போது $325 ஆகும். பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் விலை அதிகம். இந்த விலை நியாயமானதா?

Two Australian passport on a map of the world

Australian passport with the world map in the background Source: Getty / Vividrange/Getty Images/iStockphoto

நீங்கள் புதிதாக ஆஸ்திரேலிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அதற்கான கட்டண அதிகரிப்பை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.

ஜனவரி 1, 2023 இன் படி 10 வருடங்களுக்கான ஆஸ்திரேலிய கடவுச்சீட்டின் விலை $325 ஆகும். இது ஜனவரி 1, 2022 அன்று $308 ஆகவும், ஜனவரி 1, 2021 அன்று $301 ஆகவும் இருந்தது.

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களில் ஒன்றாகும். சமீபத்திய Henley Passport தரப்படுத்தலின்படி இது எட்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 185 நாடுகளுக்குச் செல்ல முடியும்.
இந்தக் காரணத்திற்காக கடவுச்சீட்டின் விலை இவ்வளவு அதிகமாக இருப்பது நியமில்லை என பலர் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டைப் போலவே கனேடிய, கிரேக்க மற்றும் Maltese கடவுச்சீட்டுகள் 185 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கின்றன எனவும், ஆனால் அந்த நாடுகளின் கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் மிகக்குறைவு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனேடியர்கள் தங்கள் கடவுச்சீட்டுகளுக்கு CAD$160 ($172) செலுத்துகின்றனர். அதே நேரத்தில் Maltese கடவுச்சீட்டுக்கு €70 - €80 ($107 - $122) மற்றும் கிரேக்க கடவுச்சீட்டுக்கு €84.40 ($130) செலுத்த வேண்டும்.

ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்துடன் ஒப்பிட்டால், நியூசிலாந்தர்கள் தங்கள் கடவுச்சீட்டுகளுக்கு NZD$199 ($180) செலுத்துகிறார்கள்.

அப்படியென்றால் ஏன் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுக்கான கட்டணம் இவ்வளவு அதிகம்?

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுகளின் அதிகரித்த விலைக்குக் காரணம் அவை கொண்டிருக்கும் பாதுகாப்பு பொறிமுறைகளாக இருக்கலாம் என சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் David Bierman கூறுகிறார்.

இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற ஏனைய நாடுகளின் கடவுச்சீட்டிலும் உயர்ந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுகள் ஏன் மிகவும் விலை உயர்ந்தவை என்பதற்கு முழுமையான பதில் இல்லை எனக் கூறினார்.
கடவுச்சீட்டு அச்சிடுதலுக்கான கூடுதல் செலவுகள் மற்றும் கோவிட்டுக்குப் பிறகு பயணத்திற்கான தேவைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமை போன்ற காரணங்களுடன் கடவுச்சீட்டுகளின் விலை ஊடாக "வருவாயை உயர்த்தும் திட்டம்" இருப்பதாகவும் David Bierman கூறினார்.

கடவுச்சீட்டுக்கான கட்டணத்திலிருந்து திரட்டப்படும் வருவாய் ஆஸ்திரேலிய அரசின் ஒருங்கிணைந்த Revenue Fundக்கு செல்கிறது.

இதேவேளை 2022 இல் 2.6 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 23 February 2023 1:58pm
Updated 23 February 2023 2:40pm
Source: SBS

Share this with family and friends