ஆஸ்திரேலிய விசா விண்ணப்ப பரிசீலனையின்போது குறித்த விண்ணப்பதாரியின் character-நடத்தை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குடிவரவு அமைச்சர் Alex Hawke உத்தரவிட்டுள்ளார்.
ஒருவரது விசா விண்ணப்பத்திற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்று character test ஆகும்.
இதன்கீழ் குடும்பவன்முறை தொடர்பில் குறித்த விண்ணப்பதாரிமீது பாரதூரமான குற்றச்சாட்டுகள் அல்லது குற்றமிழைத்ததற்கான பதிவுகள் இருந்தால் அவற்றை கவனமாக ஆராயும்படி உத்தரவிட்டுள்ள அமைச்சர், இதற்கு மேலதிகமாக திருட்டு, சுரண்டல் போன்ற வேறு குற்றச்செயல்களுடனும் அந்நபருக்கு தொடர்பிருந்தால் அது தொடர்பிலும் பரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அமைச்சரின் அறிவுறுத்தல் கடிதம் அண்மையில் சம்பந்தப்பட்ட விசா பரிசீலனை அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக character test-இல் தோல்வியடையும்பட்சத்தில் அந்த விண்ணப்பதாரி ஆஸ்திரேலியாவுக்கு வரமுடியாது அல்லது தொடர்ந்தும் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கமுடியாது.
இவ்வாறு கடுமையான விசா பரிசீலனை நடைமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம் ஆஸ்திரேலிய சமூகத்தவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தைக் குறைக்க முடியுமனெ அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆஸ்திரேலிய அரசின் புள்ளிவிபரங்களின்படி கடந்த 2019-20 நிதியாண்டில் character அடிப்படையில் சுமார் 1021 விசாக்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளதுடன் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.