இருபது முதல் முப்பது வயதிற்கு இடைப்பட்ட சுமார் 15 ஆண்களை ஏற்றிக்கொண்டுவந்த படகின் இயந்திரம் இடைவழியில் பழுதடைந்துவிட்டதாகவும், உடனடியாக அவ்விடத்திற்கு சென்ற எல்லைப்பாதுகாப்புப் படையினர் அவர்களை மீட்டு கிறிஸ்மஸ் தீவிற்கு கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து குறித்த படகிலிருந்த அனைவரையும் அழைத்துக்கொண்டு, ஆஸ்திரேலிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மேலும் 30 பேர், தனிவிமானம் மூலம் இலங்கைக்குச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இலங்கையிலுள்ள ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் பின்னர் இலங்கை குடிவரவு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய தேர்தல் தினமான மே 21ம் திகதி இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது படகில் வந்தவர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை லேபர் ஆட்சியின் கீழும், படகு மூலம் ஆஸ்திரேலியா வருபவர்கள் தொடர்பிலான எல்லைப் பாதுகாப்புக் கொள்கையில் மாற்றமில்லை எனவும், படகு மூலம் ஆஸ்திரேலியா வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும், லேபர் கட்சி அமைச்சர் Tony Burke தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாறிவிட்டதால் ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புக் கொள்கைளும் மாறிவிட்டதாக அர்த்தம் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.