விக்டோரியாவில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம்!

விக்டோரியா மாநிலத்தின் Geelong நகரில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

2022-11-22_0-20-49.jpg

Kanthasamy Alagaiya Credit: gofundme

சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் நேற்று முன்தினம் நவம்பர் 20ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து புகலிடம்கோரி ஆஸ்திரேலியா வந்த சாமி, நிரந்தர பாதுகாப்பு விசாவிற்காக விண்ணப்பித்திருந்ததாகவும், இறுதிவரை அவ்விசா கிடைக்காத நிலையிலேயே அவர் மரணமடைந்துவிட்டதாகவும் நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சாமியின் மனைவியும் மகளும் இலங்கையில் வாழ்ந்துவருவதாகவும் அவர்களைப் பார்த்துக்கொள்ளவென அவர் கடினமாக உழைத்ததாகவும், தனக்கான பாதுகாப்பு விசா கிடைத்தபின்னர், அவர்களையும் ஆஸ்திரேலியா அழைப்பதற்கு அவர் விரும்பியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, சாமியின் உடலை இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான செலவுக்கென ஊடாக, சாமியின் நண்பர் நித்தி, நிதி சேகரிப்பினை மேற்கொண்டுள்ளார்.

15 ஆயிரம் டொலர்களை இலக்காகக்கொண்டு இந்நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக நிதி சேரும் பட்சத்தில், அத்தொகை நிர்க்கதியாகியிருக்கும் சாமியின் குடும்பத்திற்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஆஸ்திரேலியாவிற்கு பாதுகாப்புத் தேடி வந்த பல புகலிடக்கோரிக்கையாளர்கள் தமக்கான நிரந்தர பாதுகாப்பு விசா கிடைக்காத நிலையில் இவ்வாறு மரணமடைகின்றமை மிகுந்த கவலைதருவதாகவும், முன்னாள் மற்றும் இந்நாள் அரசுக்களே இம்மரணங்களுக்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

If you are experiencing a personal crisis and need someone to talk to, please call: Lifeline on 13 11 14 or Beyond Blue on 1300 22 4636


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 21 November 2022 11:53pm
Updated 22 November 2022 6:19pm
Source: SBS

Share this with family and friends