'நாம் எதிர்பார்த்த ஆஸ்திரேலியா இதுவல்ல' - மீண்டும் நவுறு திரும்பியுள்ள தமிழ் அகதிகள்!

Darwin protest

Source: Facebook

நவுறு தீவிலிருந்து மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட தமிழ் அகதிகள் இருவர் டார்வினில் ஒரு ஆண்டுக்கும் மேல் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நவுறு திரும்பியுள்ளனர்.

இவர்கள் ஆஸ்திரேலியாவில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை-உடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் வந்து புகலிடம்கோரிய தமிழர்களான கிருபாகரன் மற்றும் பர்மிகா ஆகியோர் மருத்துவத் தேவைக்காக  நவுறுவிலிருந்து  ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு டார்வின் தடுப்புமுகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஒரு ஆண்டுக்கும் மேல் அங்கு வாழ்ந்துவந்த இத்தம்பதியர் அங்குள்ள நிலைமைகளை தம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை எனவும் மனநிலை ரீதியாக பாரிய தாக்கத்துக்குள்ளானதாகவும் தமது வாழ்க்கை வீணடிக்கப்படுவதாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

முகாமிலுள்ள அறைகளின் கதவுகளுக்கு தாழ்ப்பாள் கிடையாது எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் எந்நேரமும் அறைக்குள் வந்து தம்மைக் கண்காணிக்க முடியுமெனவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தாம் எதிர்பார்த்த ஆஸ்திரேலியா இதுவல்ல எனத் தெரிவித்த இவர்கள் தம்மை நவுறுவுக்கே திருப்பியனுப்புமாறு கோரிக்கைவிடுத்துவந்த பின்னணியில் டார்வின் தடுப்புமுகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இவர்கள் கடந்த திங்களன்று நவுறு திரும்பியுள்ளனர்.

நவுறுவிலுள்ளவர்களால் சில இடர்பாடுகளை எதிர்கொண்டபோதிலும் தாம் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் வேலை செய்யக்கூடியதாக இருந்ததாகவும் குறித்த தம்பதியர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தடுப்புமுகாம்களில் அகதிகள் தடுத்துவைக்கப்பட்டமை தொடர்பில் ஆஸ்திரேலிய அரசுக்கெதிராக பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் கிருபாகரன்-பர்மிகா தம்பதியரும் உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தம்பதியர் உட்பட மேலும் பலர் டார்வின் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Published 18 March 2021 5:22pm
Updated 18 March 2021 5:35pm

Share this with family and friends